புதன், 20 மே, 2020

மக்கள் ஊரடங்கு விதிகளை மீறினால் நடவடிக்கை: ஐகோர்ட்

ஊரடங்கில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் மீறுபவர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லக் கூடிய பொது மக்களைத் துன்புறுத்த கூடாது என உத்தரவிட வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன்,நீதிபதி அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே இது தொடர்பாக தமிழக டிஜிபி, காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை சமர்பித்தனர். மேலும், 4.32 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 1.59 லட்சம் மக்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 3 லட்சத்து 79 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் 5 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொதுமக்கள் சமூக பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதை மீறுபவர்கள் மீது காவல்துறை சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
credit indianexpress.com