ஞாயிறு, 31 மே, 2020

தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து தொடக்கம்: நாளை முதல் என்னென்ன தளர்வுகள்!?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் ஜூன் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதன்படி,

1) ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:

* வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.


* ·நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

 * தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகள். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. 

·* வணிக வளாகங்கள் 

*  பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம்.

·*  மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

*  மெட்ரோ ரயில் / மின்சார ரயில்.

* திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (க்ஷயச), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்.

* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

* மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.


இறுதி ஊர்வலங்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகள்:

*  இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

* திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.


பொது பேருந்து போக்குவரத்து :

*  மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை 1.6.2020 முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாநிலம் கீழ்கண்ட 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது 

I. கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும்
நாமக்கல்
II. தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும்
கிருஷ்ணகிரி
III. விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி
IV. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,
அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை
V. திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும்
இராமநாதபுரம்
VI. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி
VII. காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு
VIII. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி

 

*  மண்டலம் VII-ல் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் மண்டலம் VIII-ல் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள், 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.

*  மண்டலம் VII மற்றும் மண்டலம் VIII-க்கு உட்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது.


* அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதிக்கப்படுகிறது.

* பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

* மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்ற நிலையில், பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை.

*  அனுமதிக்கப்பட்ட இனங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது. 


இ-பாஸ் முறை :

3

* அனைத்து வகையான வாகனங்களும் மேற்கண்ட அட்டவணையில் உள்ள மண்டலத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ-பாஸ் தேவையில்லை.

* வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரவும், மண்டலங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

2) பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் 1.6.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:

i. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

ii. அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க
வேண்டும்.

iii. வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு
பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

iV. மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள  மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

V. டீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை - பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.


Vi. மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

Vii. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, மண்டலத்திற்குள் TN E-Pass இன்றி பயன்படுத்தலாம்.

Viii. ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.

iX. முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல் அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

3) பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில், கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் 1.6.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:


i. தொழில் நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

ii. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 20 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்.

iii. அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

iV. வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு
பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் இருக்கும் பொருட்டு தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
இதுவன்றி, கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

V. டீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை - பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.

Vi. மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

Vii. மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

Viii. அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது.


iX. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

X. ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்ஷாவும் அனுமதிக்கப்படுகிறது.


* பொது மக்கள் இ-பாஸ் அனுமதியில்லாமல், தனியார் போக்குவரத்துக்கு அரசினால் அனுமதிக்கப்பட்டாலும், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள், இந்நோய்த் தொற்றை தடுக்கும் வகையில்
அவர்களது பகுதிக்குள் பிரவேசிப்பவர்கள் மீது, குறிப்பாக, வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் போன்ற வெளி நபர்கள் உள்ளே பிரவேசிக்க தேவையான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு 2,500 ரூபாய் மதிப்பூதியம்:

பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணியில் தன்னலம் கருதாமல், அயராது களப்பணி ஆற்றிவரும் சுமார் 33,000 நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளர்களின்  சேவையை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் வகையில்,  ஒவ்வொரு தூய்மைப் பணியாளருக்கும் சிறப்பினமாக 2,500 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும்.

குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக தனிமை முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர். அவ்வாறு முகாம்களில்தங்க வைக்கப்படும் போது, அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சியில் மட்டும் அவர்கள் முகாம்களில் இருந்து வீடு திரும்பும்போது தலா 1,000 ரூபாய்  நிவாரணம் வழங்கப்படும்.