திங்கள், 25 மே, 2020

விமான போக்குவரத்து! - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்தை தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ளள அறிவிப்பில், தமிழகம் வர விரும்பும் பயணிகள் TNePASS இணையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் இருந்து ஒரு நபருக்கு மேல் பயணிக்கும்போது, அவர்களின் விவரங்களையும் TNePASS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


பயணத்திற்கான அனுமதி சீட்டு, இணையத்தில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விமானத்தில் தமிழகம் வருபவர்கள் கொரோனா அறிகுறி இருந்தால் கட்டாயம் 14 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ள தமிழக அரசு, விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு செல்ல வாகன ஏற்பாட்டை பயணிகளே செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது. 
மேலும், விமான நிலையத்திற்குள் வாகனத்தில் வந்து அழைத்து செல்ல ஒரு நபருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும் என்றும், விமான நிலையத்தில் பயணிகள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட மருத்துவ பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேணடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.