ஞாயிறு, 31 மே, 2020

Unlock 1.0 : வரை தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு அமல்!

Unlock 1.0 : வரை தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு அமல்!


கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டது, பின்னர் இது 4வது கட்டமாக மே 31 வரை நீட்டிக்கப்பட்டது. நாளையுடன் ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில் Unlock 1.0 என்ற பெயரில் முதற்கட்டமாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது உள்துறை அமைச்சகம்.

ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு:

இதன்படி Containment Zones எனப்படும்
கொரோனா நோய்க்கட்டுப்பாடு பகுதிகளில் மட்டும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் மாவட்ட நிர்வாகங்களே நோய்க்கட்டுப்பாடு பகுதிகளை வரையறை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்க்கட்டுப்பாடு பகுதிகளில் இருந்து, அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிற பணிகளுக்காக வெளியே செல்வது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

* அதே போல மாநில/யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடு பகுதிகள் தவிர்த்து பிற பகுதிகளில் சூழலை பொறுத்து தேவைப்படும்பட்சத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்திக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது

இரவில் ஊரடங்கு:

நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து தனி நபர் நகர்வுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இ- பாஸ் தேவையில்லை:

* மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயான தனிநபர் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு எந்தத்தடையும் கிடையாது. இதற்காக இ-பாஸ் பெற தேவையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல எந்த மாநில அரசும் சரக்கு போக்குவரத்துக்கு தடை அல்லது இடையூறு விதிக்கக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.


* எனினும் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் இந்த விவகாரத்தில் சூழலை பொறுத்து முடிவு எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்படுகிறது. இது தொடர்பாக விரிவான விளம்பரப்படுத்துதலையும் அந்த அரசுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* பயணிகள் ரயில், ஷ்ராமிக் சிறப்பு ரயில், உள்நாட்டு விமான சேவை, வந்தே பாரத் மிஷன் விமான சேவை போன்றவை வழிகாட்டு நெறிமுறைகள்படி தொடர்ந்து இயக்கப்படும்.


Unlock 1.0 என்ற பெயரில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள்:

ஜூன் 8 முதல் முதற்கட்ட தளர்வுகள்:

* வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி

* ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி

* மேற்கண்ட நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுமுறைகளை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிடும்

ஜூலை மாதம் 2ம் கட்ட தளர்வு:

பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுடன் கலந்தாலோசித்து ஜூலை மாதம் முடிவு எடுக்கப்படும்.

 

மூன்றாம் கட்டம்:

சர்வதேச விமான சேவை தொடங்குதல், மெட்ரோ ரயில் சேவை, சினிமா திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், மது பான கூடங்கள், அரங்கங்கள்

சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, மத விழாக்கள் மற்றும் இதர கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி அளிப்பது குறித்து சூழ்நிலையை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும்.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள்:

நோய் தாக்கம் எளிதில் பரவக்கூடியவர்களாக கருதப்படும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆரோக்கிய சேது செயலி:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவும் ஆரோக்கிய சேது செயலி பயன்பாட்டை அலுவலகங்களில் ஊழியர்கள் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தீவிரமாக அமல்படுத்த வேண்டும்:

உள்துறை அமைச்சகத்தின் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் தீவிரமாக அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.


விதிமீறுபவர்களுக்கு தண்டனை:

மேற்கண்ட விதிமுறைகளை மீறுபவர்கள் பேரிடர் மேலான்மை சட்டம் 2005-ன் கீழ் தண்டிக்கப்படுவர்.