ஞாயிறு, 31 மே, 2020

ஒரு பனிப்போரை உருவாக்க முயல்கிறது: ஹாங்காங்கின் கடைசி பிரிட்டிஷ் கவர்னர் குற்றச்சாட்டு

சீனா அதிபர் ஜீ ஜிங்பிங் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து மிகவும் பதற்றம் அடைந்துள்ளதால் ஒரு ஆபத்தான பனிப்போரை உருவாக்க அவர் வழிவகை செய்துவருவதாக ஹாங்காங்கின் கடைசி பிரிட்டிஷ் கவர்னர் தெரிவித்துள்ளார். 

பிரிட்டிஷ் காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்துவந்த ஹாங்காங் 1997 ஆம் ஆண்டு உடன்படிக்கையின் படி சீனாவுடன் இணைந்தது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் படி சீனா ஹாங்காங்கிற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என பிரிட்டன் கேட்டுக்கொண்டது. இதனால் தன்னுடன் இணைந்த ஹாங்காங்கிற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கியுள்ள சீனா பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கையை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துவருகிறது. 

இதனிடையே சீனாவிடன் இருந்து சுதந்திரம் கோரி ஹாங்காங்கில் கடந்த ஆண்டு முதல் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த போராட்டங்களின் போது ஹாங்காங்கில் உள்ள சீனா கொடிகள் மற்றும் அலுவலகங்கள் அனைத்தும் சூரையாடப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த சீன அரசு ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை குறைக்கும் வகையிலான தேசிய பாதுகாப்புச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. 


இதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த மசோதா சட்டமாக்கப்படவுள்ளது. இது சட்டமாக்கப்பட்டால் ஹாங்காங்கின் சிறப்பு அதிகாரங்கள் ரத்து செய்யப்படும் என கூறப்படுகிறது. இதனிடையே சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பிரிட்டன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் சீனாவில் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஹாங்காங்கின் கடைசி பிரிட்டிஷ் கவர்னர் கிரிஸ்பார்டன், ஹாங்காங்கில் சீனாவால் நடத்தப்பட்டு வரும் ஒடுக்கு முறைகள் மக்களை நாட்டை விட்டு வெளியேற்ற தூண்டுகிறது என தெரிவித்தார். இது சுந்தந்திரமான ஹாங்காங்கின் எதிர்காலத்தை மட்டுமல்லாமல் ஆசியாவில் முதன்மையான சர்வதேச நிதி மையமாக திகழும் ஹாங்காங்கில் திறனையும் கேள்விக்குறியாக்குகிறது என தெரிவித்தார். 

 

இதனால் ஹாங்காங்கில் இருந்து மக்கள் வெளியேறுவதோடு அந்நாட்டின் மூலதனமும் வெளியேறலாம் என அவர் கவலை தெரிவித்துள்ளார். மேலும் மேற்கு நாடுகள் ஜி ஜிங்பிங் ஐ அப்பாவியாக கருதுவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்த அவர், கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து மிகவும் பதற்றம் அடைந்துள்ளதால் ஒரு ஆபத்தான பனிப்போரை உருவாக்க அவர் வழிவகை செய்துவருவதாகவும் குற்றம் சாட்டினார்.