இந்தியா-சீனா எல்லை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையே சமீபத்தில் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா-சீனா எல்லையான லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி அருகே சீனா வீரர்கள் எல்லை கட்டுபாட்டுக்கோட்டை மீறி இந்திய எல்லைக்கும் நுழைய முயன்றனர். இதனை தடுத்த இந்திய வீரர்களுக்கும் சீனா ராணுவத்தினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் தங்கள் எல்லையில் படைகளை குவித்து வந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவானது. இதனிடையே இந்தியா சீனா பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து அமெரிக்காவின் இந்த விருப்பத்துக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, தூதகர ரீதியில் இந்தியா - சீனா இடையிலான எல்லையில் அமைதியை நிலை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதுதொடர்பாக பல ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்திய தலைமையின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதே நேரத்தில் இந்தியா தனது எல்லையையும், இறையாண்மையையும் விட்டுக்கொடுக்காது எனவும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடியதாக தெரிவித்திருந்தார். அதில் சீனாவுடனான இந்த விவகாரத்தால், பிரதமர் மோடி சந்தோஷமான மனநிலையில் இல்லை எனவும் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் அதிக மக்கள் தொகையை கொண்டிருக்கிறது, ஆனால் எல்லை விவகாரத்தில் இருநாடுகளும் மகிழ்ச்சியாக இல்லை என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள மத்திய அரசு வட்டாரங்கள், இந்தியா-சீனா எல்லை பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் இடையே சமீபத்தில் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளன. மேலும் இரு நாட்டுத்தலைவர்களுக்கும் இடையேயான கடைசி உரையாடல் என்பது எப்ரல் 4 ஆம் தேதி ஹட்ரோ குளோரோகுயின் தொடர்பான மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்துள்ளன.