பிரதமர் மோடியின் நிவாரண அறிவிப்பில் தெளிவில்லை என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஆம்பன் புயலால், மேற்குவங்கம் உருக்குலைந்த நிலையில், டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கொல்கத்தா சென்ற பிரதமர் மோடி, ஹெலிகாப்டரில் பயணித்தவாறு வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டார். பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் உடன் சென்றார். இதையடுத்து மேற்குவங்கத்திற்கு உடனடி நிவாரண நிதியாக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
மேற்கு வங்கத்தில் ஆய்வை முடித்துக்கொண்டு ஒடிசா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். இதைஅடுத்து, புயல் சேதம் குறித்தும் தேவைப்படும் நிதி உதவிகள் குறித்து, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, ஒடிசா புயல் நிவாரணத்திற்காக முதற்கட்ட நிதியாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
இதனிடையே, பிரதமரின் நிவாரண அறிவிப்பில் தெளிவில்லை என மேற்குவங்க முதலமைச்சர் மம்தாபானர்ஜி, அதிருப்தி தெரிவித்துள்ளார். ஆயிரம் கோடி ரூபாய் முன் பணம் என்று கூறும் அதே நேரம், இது மொத்த தொகையாகவும் இருக்கலாம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளதாக மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். ஆம்பன் புயலால், மேற்கு வங்க மாநிலத்திற்கு ஒரு லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.