கொரோனா வைரஸ் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பொருளாதார பாதிப்பு காரணமாக உலகில் சுமார் 6 கோடி பேர் கடும் வறுமையின் பிடியில் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக உலக வங்கியின் குழு தலைவர் டேவிட் மால்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் கடும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதாகவும், உலக அளவில் சுமார் 6 கோடி பேர் கடும் வறுமையின் கீழ் தள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே லட்சக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள டேவிட் மால்பாஸ், பல லட்சம் தொழில் முனைவோர் தங்கள் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ஏழ்மை ஒழிப்புக்காக கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை, கொரோனா வைரஸ் பாழ்படுத்திவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வளரும் நாடுகளுக்கு உதவும் நோக்கில், 12 லட்சம் கோடி ரூபாய் கடனுதவி அளிக்க உலக வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ள உலக வங்கியின் குழு தலைவர், அடுத்த 15 மாதங்கள் வரை இந்த கடனுதவி வழங்கப்படும் என கூறியுள்ளார். இதன்மூலம், உலகில் 70 சதவீத மக்கள் வாழும் 100 நாடுகள் பயன்பெறும் என்று தெரிவித்துள்ள உலக வங்கி, இந்த நாடுகளில் வாழும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கும், சுகாதாரத்திற்கும் இந்த நிதி உதவி பயன்படுத்தப்படும் என்றார்.
credit ns7