கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க வரவிருக்கும் ரம்ஜான் பண்டிகையில் தொழுகையை வீடுகளில் நடத்தலாம் என உ.பி.யின் தாரூல் உலூம் மதரஸா தெரிவித்துளளது. இதில், வாழ்த்து கூற சந்திப்புகள் தேவையில்லை என்று அதன் முப்தி எனும் ஷரீயத் சட்டம் அறிந்த மவுலானாக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தம் ஷரீயத் சட்டத்தைப் பின்பற்றும் முஸ்லிம்கள் அதில் ஏற்படும் சந்தேகங்கள் மீது முப்திகளிடம் சந்தேகம் கேட்பது வழக்கம். முஸ்லிம்களின் ஷரீயத் சட்டத்தை முழுமையாக அறிந்தவர்களான முப்திகள் இதற்கு அளிக்கும் விளக்கம் ’பத்வா’ என்றழைக்கப்படுகிறது.
தம் ஷரீயத் சட்டத்தைப் பின்பற்றும் முஸ்லிம்கள் அதில் ஏற்படும் சந்தேகங்கள் மீது முப்திகளிடம் சந்தேகம் கேட்பது வழக்கம். முஸ்லிம்களின் ஷரீயத் சட்டத்தை முழுமையாக அறிந்தவர்களான முப்திகள் இதற்கு அளிக்கும் விளக்கம் ’பத்வா’ என்றழைக்கப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தின் சஹரான்பூர் மாவட்டத்தின் தியோபந்தில் உள்ள தாரூல் உலூம் மதரஸா முப்திகளால் அளிக்கப்படும் பத்வாக்களுக்கு முஸ்லிம்கள் இடையே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன் துணைவேந்தரான முப்தி அப்துல் காசீம் நொமானியிடம், கொரோனா வைரஸ் பரவும் காலகட்டத்தில் வரும் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடுவது குறித்தும் கேட்கப்பட்டது.
இதுகுறித்து தாரூல் உலூம் மதரஸாவின் செய்தித் தொடர்பாளரான அஷ்ரப் உஸ்மானி கூறும்போது, ”லாக்டவுன் காலத்தின் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைகளை வீடுகளில் தொழுவது போல் ரம்ஜானிலும் செய்யலாம் என பத்வா அளிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் காலத்தில் ஒன்றாக இணைந்து ரம்ஜான் தொழுகை நடத்த முடியாதது மன்னிப்பிற்கு உரியது. இந்நாளில் வாழ்த்து கூறவேண்டி எவரையும் சந்திக்கத் தேவையில்லை எனவும் பத்வாவில் விளக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 25 இல் முஸ்லிம்களின் ரமலான் மாதம் தொடங்கி நடைபெறுகிறது. இம்மாதம் முழுவதிலும் நோன்பிருக்கும் முஸ்லிம்கள் அதன் 29 அல்லது 30 ஆவது நாள் மாலையில் பிறை நிலவைப் பார்த்து மறுநாள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.
இதன்படி, வரும் மே 24 அல்லது 25 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நாளுக்கான சிறப்புத் தொழுகையை சில குறிப்பிட்ட முக்கிய மசூதிகளில் மட்டும் முஸ்லிம்கள் பலரும் ஒன்றுகூடி நடத்துவது வழக்கம்.
இதனால், கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுவதன் மீது இந்த பத்வா அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியது முதலாகவே நாடு முழுவதிலும் உள்ள மசூதிகளில் ஒன்றுகூடி நடத்தப்படும் 5 வேளை தொழுகைக்கு அரசு தடை விதித்துள்ளது.