செவ்வாய், 26 மே, 2020

கொரோனா தடுப்பு பணி: சிறப்பாக செயல்படும் 4 நகரங்கள்!

கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக கையாள்வதில் சென்னை, பெங்களூரு, ஜெய்ப்பூர், இந்தூர் நகரங்கள் முன்மாதிரியாக திகழ்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 1,45,380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,167 பேர் உயிரிழந்த நிலையில் 60,490 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறைவாகவே உள்ளது. 
கடந்த சில நாட்களாக மத்திய அரசு நகராட்சி அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி கொரோனா நிலவரத்தை கவனித்து வருகிறது. இதன் மூலம் ஜெய்ப்பூர் மற்றும் இந்தூர் நகரங்கள் கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்படுவதாக தெரியவந்துள்ளது. அதே போல் சென்னை மற்றும் பெங்களூரூ நகரங்களில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் பல்வேறு நகராட்சிகள் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாவதை தடுக்க முடியாமல் தவித்து வருகின்றன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்காணிப்பது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளை கண்டறிவது, வீடு வீடாக கண்காணிப்பை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை சரிவர செய்ய முடியாமல் குழம்பி நிற்கின்றன. குறிப்பாக பெரிய நகரங்களில் உள்ள குடிசைப் பகுதிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. 
ஆனால் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கண்காணிப்பு தீவிரமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஜெய்ப்பூரில் குறைவான எண்ணிக்கையிலான மளிகைக் கடைகளே திறக்கப்பட்டுள்ளன. மக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி உள்ளிட்டவைகளில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதே போல் சென்னை மற்றும் பெங்களூரூவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும், இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. கோவிட்- 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இந்த இரண்டு தென் மாநில நகரங்களும் எடுத்துக்காட்டாக இருப்பதாக  மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நகரங்களில் வெண்டிலேட்டர்களை உகந்த முறையில் பயன்படுத்தி சிறப்பாக சிகிச்சை அளிப்பதாக தெரிவித்துள்ளார். சென்னையில் இதுவரை 11,125 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.