செவ்வாய், 26 மே, 2020

நிலநடுக்கத்தின் போதும் நேரலையை தொடர்ந்த நியூசிலாந்து பிரதமர்!

credit ns7
Image
நியூசிலாந்து பிரதமர் டிவி நேரலையில் பங்கேற்றிருக்கையில், நிலநடுக்கம் ஏற்பட்ட போதும், எந்த அச்சமும் இன்றி தனது நேரலையை தொடர்ந்துள்ளார். 
நியூசிலாந்தின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள லெவின் நகரத்தில் 30 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் வெலிங்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. 30 விநாடிகளுக்கு மேல் இந்த நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த மக்கள் உடனடியாக மேசைக்கு கீழே அமர்ந்து கொண்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால் இதனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அப்போது அவர் இருந்த இடத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டு அவரை சுற்றி இருந்த பொருட்கள் குலுங்கின. ஆனால் இதனைக் கண்டு அஞ்சாத பிரதமர், நிலநடுக்கத்தை உணர்ந்ததாக நெறியாளரிடம் கூறிவிட்டு, தான் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்து நேரலையை தொடர்ந்துள்ளார். தான் பாதுகாப்பான இடத்தில் அமர்ந்திருப்பதாகவும், யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் விளக்கமளித்தார்.
இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் நேரலையில் பதிவான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட போதும், அதனைக் மனோதைரியத்துடன் எதிர்கொண்டு நேரலையை தொடர்ந்து நியூசிலாந்து பிரதமரை பலரும் பாராட்டி வருகின்றனர்.