கொரோனா பாதிப்பால் இந்தியா ஸ்தம்பித்து இருக்கும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வருகிறது.
இந்த காட்டுத்தீயால் ஏற்படும் அனல் காற்றால் வட இந்தியாவில் வெப்பம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான விலங்குகள் மற்றும் பறவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மே 23ம் தேதி ஸ்ரீநகர் மாவட்டத்தில் காட்டுத்தீ முதலில் பற்றியதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதன்பிறகு காற்றின் வேகம் அதிகம் இருந்ததால் தீ பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் விளக்கமளித்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுமார் 38,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காடுகள் அமைந்துள்ளன. 1,145 அரியவகை தாவர இனங்கள் காணப்படுகின்றன. தற்போதைய காட்டுத்தீயால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீயால் இதுவரை 71 ஹெக்டேர் அளவிலான காடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.
உத்தகரகாண்ட் மாநிலத்தில் காட்டுத்தீ அவ்வப்போது ஏற்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டில் ஏற்பட்ட 46 காட்டுத்தீ விபத்துகளால் சுமார் ரூ.1.32 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் கொரோனா தாக்கத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காட்டுத்தீ பரவலும் மாநில அரசுக்கு மேலும் ஒரு சவாலாக அமைந்துள்ளது.