ஞாயிறு, 31 மே, 2020

மருத்துவ இட ஒதுக்கீடு துயரம்! : ரவீந்திரன் துரைசாமி


இட ஒதுக்கீடுக்கான இன்னொரு போராட்டக் களம் தமிழகத்தில் சூல் கொள்கிறது. மருத்துவக் கல்வியில் அகில இந்திய கோட்டாவுக்கு மாநிலங்கள் ஒதுக்கும் சீட்களில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி) இட ஒதுக்கீடு இல்லை என்பதுதான் இதற்கான காரணம்.

கொஞ்சும் புரியும்படியாக பார்க்கலாம்!

மருத்துவக் கல்வியில் 3 வகைகளில் இட ஒதுக்கீடு அமல் படுத்தப்படுகிறது. ஒன்று, மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில், மத்திய அரசு இட ஒதுக்கீடு நடைமுறைப்படி மருத்துவக் கல்வி இடங்கள் நிரப்பப்படுகின்றன. மாநிலங்களில் அந்தந்த மாநில இட ஒதுக்கீடு விகிதப்படி மருத்துவக் கல்வி சீட்களை நிரப்புகிறார்கள். இவை இரண்டிலும் இப்போது பிரச்னை இல்லை.

மூன்றாவதாக, மத்தியத் தொகுப்பு! மதுரை அல்லது கன்னியாகுமரியில் ஒரு மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அந்தக் கல்லூரியில் 85 பேரை நீட் மதிப்பெண் மற்றும் மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்த்துக் கொள்ளலாம். எஞ்சிய 15 இடங்களை மத்தியத் தொகுப்புக்கு கொடுத்துவிட வேண்டும்.


இதேபோல ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மொத்த இடங்களில் 15 சதவிகித இடங்களை மத்தியத் தொகுப்புக்கு வழங்குவார்கள். இதேபோல முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ் ஆகிய படிப்புகளில் 50 சதவிகித இடங்களை மத்தியத் தொகுப்புக்கு வழங்க வேண்டும்.

இப்படி இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களில் இருந்து பெறப்படும் இடங்களை அகில இந்திய அளவிலான மெரிட் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மத்திய அரசு நிரப்ப வேண்டும். இந்த மத்தியத் தொகுப்பு இடங்களை நிரப்புவதில் எஸ்.சி பிரிவினருக்கான 15 சதவிகித இட ஒதுக்கீடு, எஸ்.டி. பிரிவினருக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீடு, உயர் ஜாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு ஆகியன முறையாக பின்பற்றப்படுகின்றன. ஆனால் இதர பிற்பட்ட வகுப்பினருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு மட்டும் கடைபிடிக்கப்படவில்லை.

இப்படி மத்தியத் தொகுப்பில் இருந்து கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருக்க வேண்டிய 11,000-க்கும் அதிகமாக மருத்துவக் கல்வியிடங்கள் பொதுப்பட்டியலுக்கு போயிருக்கிறது. சந்தேகமே இல்லாமல், இது சமூக அநீதி. ஆனால் சிலர் சொல்வதுபோல, இது கடந்த 3 ஆண்டுகளாக மட்டும் நடப்பதல்ல.

மத்தியத் தொகுப்பு நடைமுறைகள் உருவான 2007 மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் இருந்து இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்தியா முழுவதும் இதர பிற்பட்ட வகுப்பினர் பெரிய இழப்பை 13 ஆண்டுகளாக சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதர பிற்பட்ட வகுப்பினர் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால், இதை வலியுறுத்தி இதுவரை சாதிக்க முடியவில்லை.

இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடை வழங்காமல் இருப்பதற்கு ஒரு நடைமுறை சிக்கலை மத்திய அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள். அதாவது, எஸ்.சி., எஸ்.டி பட்டியலை நிர்ணயிப்பது மத்திய அரசு என்பதால், அந்தப் பட்டியல் இந்தியா முழுக்க ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆனால் பிற்பட்ட வகுப்பினரை நிர்ணயம் செய்வதில் மாநிலங்களுக்கு இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இதனால்தான் மத்தியத் தொகுப்பு இடங்களில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியவில்லை எனக் கூறுகிறார்கள்.

இதுவும் ஏற்கத்தக்க சமாதானம் அல்ல. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த மத்தியத் தொகுப்பு இடங்களில் பிற்பட்ட, இதர பிற்பட்ட வகுப்பினருக்கு தமிழகத்தில் 50 சதவிகித இடங்களை ஒதுக்க வேண்டும் என கேட்கிறார். அதாவது, அந்தந்த மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு முறையில் மத்தியத் தொகுப்பு இடங்களை கொடுத்துவிடுங்கள் என்பது இதன் அர்த்தம்.

என்னைப் பொறுத்தவரை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் இடங்கள் என்பதால் மத்திய அரசு இட ஒதுக்கீடு முறைப்படி 27 சதவிகித இடங்களையாவது கொடுத்தே ஆகவேண்டும். 2018-ம் ஆண்டு இதர பிற்பட்டோர் ஆணையத்திற்கு நரேந்திர மோடி அரசு, அரசியல் சாசன அந்தஸ்து வழங்கியது. அதாவது, எஸ்.சி, எஸ்.டி கமிஷனைப் போல ஓ.பி.சி கமிஷனும் அதிகாரம் மிக்க அமைப்பாக உருமாறியிருக்கிறது. இந்த இட ஒதுக்கீடை வழங்காத அதிகாரிகள் மீது மேற்படி அமைப்பு கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட சிலர் கொடுத்திருக்கும் புகார் அடிப்படையில் அதற்கான நடவடிக்கை இருக்கும் என்றே நினைக்கிறேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தப் பிரச்னையை வலிமையாக முன்னெடுக்கிறார். ஏற்கனவே முற்பட்ட பிரிவு ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடை எதிர்ப்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். தற்போது பிற்பட்ட வகுப்பினருக்கு 50 சதவிகிதம் கேட்பது, இதற்காக அனைத்துக் கட்சியினரை திரட்டிப் போராடத் தயாராவது ஆகியன திமுக.வுக்கு அரசியல் ரீதியாக உதவிகரமாகவே இருக்கும். கருணாநிதி இருந்திருந்தால்கூட இந்த விஷயத்தில் இவ்வளவு உறுதியாக இருந்திருப்பாரா எனத் தெரியவில்லை.

ராகுல் காந்தி இந்த விஷயத்தில் இதுவரை குரல் கொடுக்கவில்லை. அவரிடம் இதை யாரும் சரியாக எடுத்துச் செல்லவில்லையா? எனத் தெரியவில்லை. மத்தியில் ஆளும் பாஜக, இந்த விஷயத்தில் ராகுல் காந்தி குரல் கொடுக்கட்டும் என்றுகூட காத்திருக்கலாம். காரணம், பிற்பட்ட வகுப்பினருக்கு இந்த இட ஒதுக்கீடை வழங்குவதன் மூலமாக முற்பட்ட வகுப்பினர் அதிருப்தி அடையக்கூடும் என பாஜக நினைக்கலாம். எல்லாமே, அரசியல் கூட்டல், கழித்தல் கணக்குகள்தான்!

(கட்டுரையாளர் ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்- சமூக ஆய்வாளர்)