சனி, 30 மே, 2020

வேகமாக பரவும் கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்கள்!

தினமும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். வைரஸை எதிர்த்து போராடுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுதான் முக்கியமான ஒன்று. ஆனால் என்ன உணவு சாப்பிட வேண்டும்? எதை எதை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என மக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். வெயில் காலத்தில் என்னென்ன உணவுகள் எடுத்துக் கொள்ளலாம், அதில் எவை எவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உங்களை ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் வைத்துக் கொள்ளும் என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம்.

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை:

 இதில் இரண்டிலும் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் உடலுக்கு மிகுந்த பலன் அளிக்கும். இதுமட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது உதவுகிறது. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது மற்றும் உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. இந்த இரண்டு பழங்களையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.


தர்பூசணி மற்றும் வெள்ளரி:

இந்த இரண்டிலும் நீர்ச்சத்து அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து உங்களது உடலை பாதுகாக்க முடியும். மேலும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க வழிவகுக்கிறது. இவை இரண்டிலும் குறைவான அளவில்தான் கலோரிகள் காணப்படுகிறது; உடல் எடையை குறைப்பதற்கும் உதவி செய்யும் உணவுகள் இவை.

மாம்பழம்:

வெயில் காலம் வந்தாலே மக்களுக்கு முதலில் நினைவில் வருவது மாம்பழங்கள்தான். இதில் உள்ள வைட்டமின் ஏ, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. நாம் குறிப்பிட்ட அளவில் பழங்களை உணவில் எடுத்துக் கொண்டால் அதனால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும். 


இதுமட்டுமல்லாமல் நாம் உணவில் சேர்த்து கொள்ளும் தயிரின் பயன்கள் நமக்கு முழுவதுமாக தெரிவதில்லை. உணவு செரிமானத்திற்கும் தயிர் உதவுகிறது. தயிரில் அதிக அளவு வைட்டமின் டி நிறைந்து காணப்படுகிறது. இதனை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உங்களது நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக செயல்பட வைக்க உதவும். தற்போது உள்ள சூழலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.