சனி, 23 மே, 2020

“பிரதமர் அறிவித்த சிறப்பு நிதித்தொகுப்பு நாட்டின் கொடூரமான நகைச்சுவை” -சோனியா காந்தி

credit ns7
Image
பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு, நாட்டின் பொருளாதார சூழல், புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க சோனியா தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. இதில், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஸ் ஆகிய கட்சிகள் மட்டும் பங்கேற்கவில்லை. 

இந்த கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, ஜனநாயகத்தையும், கூட்டாட்சியின் தத்துவத்தையும் மறந்துவிட்டு மத்திய அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார். ஏழைகள் மீது மத்திய அரசு இரக்கமற்று இருப்பதாகவும், சீர்திருத்த நடவடிக்கை என்ற பெயரில், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்கிறது என்றும் அவர் விமர்சித்தார். 

மேலும், பிரதமர் அறிவித்த 20 லட்சம் ரூபாய் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு நிதித்தொகுப்பும், அதைத் தொடர்ந்து 5 நாட்களாக பிரித்துப் பிரித்து வாசித்த நிதியமைச்சர் உரையும், நாட்டின் கொடூரமான நகைச்சுவை என்றும் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்தார்.