புதன், 20 மே, 2020

தமிழகத்தில் கொரோனா இல்லாத சுற்றுலாத்தலம்!

கொரோனா இல்லாத கொடைக்கானல். இதுதான் கொடைக்கானலின் புதிய பெருமிதமாக தற்போது உருவெடுத்திருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு கிராமங்களும் நகரங்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த பாதிப்பில் இருந்து விலகியே இருக்கிறது கொடைக்கானல். குளிர் பிரதேசம் என்பதால், இங்கு கொரோனா வைரஸ் தொற்று அதிகம் ஏற்படக்கூடும் என அஞ்சப்பட்ட நிலையில், கொரோனா இல்லாத கொடைக்கானலை சாத்தியமாக்கி இருக்கிறார்கள் இந்நகரின் வருவாய் துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, நகராட்சி ஆகியவற்றின் உயர் அதிகாரிகள். 

இவர்களின் தேர்ந்த திட்டமிடல் காரணமாக, ஊரடங்கு அறிவிப்புக்கு சில நாட்கள் முன்பாகவே வெளி நபர்களில் பலர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அதோடு, நகருக்கு வரும் பிரதான நுழைவு வழியான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே சோதனைச் சாவடி அமைத்து, மருத்துவ குழுவினர், காவல்துறையினர், நகராட்சி நிர்வாகத்தினரைக் கொண்டு சுழற்சி முறையில் 24 மணி நேர கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். 

கொடைக்கானல் நகராட்சி மூலம் பல லட்சம் ரூபாய் செலவில் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு வீடுகள், பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் நாள்தோறும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும், மக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க, 19 வாகனங்கள் மூலம், கொடைக்கானல் நகரம் முழுவதும் வீதி வீதியாகச் சென்று பழங்கள், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் ஆகியவை விற்கப்பட்டு வருகின்றன. 
கொடைக்கானல்

கொடைக்கானல் மக்களிடையே கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை காவல்துறை சிறப்பாக ஏற்படுத்தி இருப்பதாகக் கூறுகின்றனர் இந்நகர மக்கள். அதோடு, ஏராளமான சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும், தொழிலதிபர்களும் உதவிப் பொருட்களை வாரி வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. 

கொடைக்கானலில் மருத்துவ குணங்கள் கொண்ட அவக்கோடா பழம், வெள்ளைப்பூண்டு, மிளகு, இஞ்சி, மலைவாழை, ப்ரக்கோலி போன்றவை விளைகின்றன. இவற்றை இங்குள்ள மக்கள் தினசரி உணவில் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக கொடைக்கானலில் வாழும் மக்களிடம் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாகவும், இங்கு விளையும் அறிய வகை மூலிகைச் செடிகளும் மக்களுக்கு இயற்கையான பாதுகாப்பை அளித்து வருவதாகவும் பலரும் கூறுகிறார்கள். 

ஒருங்கிணைந்து செயல்பட்டால் எந்த சவாலையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம் என்பதற்கு கொடைக்கானல் நிர்வாகம் சிறந்த உதாரணமாக விளங்கி வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் இருக்கும் இந்த நகரம், கொரோனாவை கையாள்வதிலும் உயர்ந்தே விளங்குகிறது. 
credit ns7.tv