ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்பாட்டிற்கு WHO தடை - இந்தியாவில் நிலை இதுதான்
Hydroxychloroquine : ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தின் பயன்பாடு, சர்வதேச நாடுகளில் பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தியுள்ளநிலையில் அதுகுறித்த மறு ஆய்வை நிகழ்த்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து வழங்க உலக சுகாதார அமைப்பு தடைவிதித்துள்ளது. இந்த மருந்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடான இந்தியா, மனிதாபிமான அடிப்படையில், அமெரிக்கா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து இதய நோய் உள்ளிட்ட அபாயங்களை ஏற்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், இதுபோன்ற விளைவுகள், இந்தியாவில் யாருக்கும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் செயலாளர் டாக்டர் பல்ராம் பார்கவ் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை ஆன்டிபயாடிக் மருந்தான அஜித்ரோமைசினுடன் இணைந்து வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
நிடி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினரும், அதிகாரமிக்க அமைச்சர்கள் குழுவின் தலைவருமான டாக்டர் வினோத் பால் கூறியதாவது, குளோராகுயின் மருந்தை நாம் பலகாலமாக பயன்படுத்தி வருகிறோம். காய்ச்சல் உள்ள குழந்தைகளுக்கு குளோரோகுயின் மருந்தை 3 நாட்களுக்கு வழங்க வேண்டும் என்று என் ஆசிரியரே கூறியுள்ளார்.
முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து நிரந்தர தீர்வு அளித்து வருகிறது. முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள செல்களில் pH தன்மையை அதிகரிக்க செய்து, அதனை காரத்தன்மை கொண்டதாக மாற்றுகிறது. அதில் உள்ள ஜிங்க், மற்ற செல்களில் வைரஸ் ஊடுருவலை தடுக்கிறது. கொரோனா வைரஸ் சிகிச்சைகளிலும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் பங்கு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதன்மை பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை வழங்கியுள்ளோம். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக டாக்டர் பால் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து குறித்த பயன்பாட்டில், இந்தியாவில் எவ்வித பாதகமான நிகழ்வுகளும் இதுவரை ஏற்படவில்லை. இந்தியாவில், இந்த மருந்தை சிகிச்சைக்கு மட்டுமல்லாது, நோய்த்தடுப்பு நடவடிக்கையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்துவதால், அசாதாரண இதயத்துடிப்பு போன்ற சில பக்கவிளைவுகள் குறைந்த அளவிலேயே பதிவாகியுள்ளது இந்த மருந்திற்கு பலன் அதிகமாக இருப்பதால், இந்த மருந்தை தாங்கள் பரிந்துரைத்து வருவதாக பால் மேலும் கூறியுள்ளார்.
டாக்டர் பாலின் கருத்தை, டாக்டர் பார்கவ்வும் வழிமொழிந்துள்ளார். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் கோவிட் 19 புதுவிதமான வைரஸ். எந்த மருந்திற்கு இந்த வைரஸ் கட்டுப்படும் என்ற ஆய்வுகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில், குளோரோகுயின் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தும் மிக பாதுகாப்பான ஒன்றே ஆகும்.
ஆய்வக சோதனையின் வைரஸ்க்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் வெற்றி பெற்றுள்ளது. அதனடிப்படையிலேயே, இந்த மருந்தை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா வழங்கியிருந்தது. ஆய்வக சோதனைகளின் அடிப்படையிலேயே, அமெரிக்காவும் இந்த மருந்திற்கு அனுமதி வழங்கியது.
டெல்லியில் உள்ள 3 அரசு மருத்துவமனைகள், எய்ம்ஸ், ஐசிஎம்ஆர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் வழங்கப்பட்டதாகவும், அவர்களுக்கு இதுவரை எவ்வித அபாயகரமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.
சில கேஸ்களில் மட்டும் குறிப்பிட்ட அளவில் சிறுபக்கவிளைவுகள் இருந்ததாக டாக்டர் பார்கவா கூறியுள்ளார்.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை தாங்கள் முதன்மை பணியாளர்களுக்கு வழங்கியபோது அவர்களிடம் 3 விசயங்களை கண்டறிந்தோம். அவர்களுக்கு எந்தவிதமான அசாதாரண நிகழ்வுகள் நிகழவில்லை. பக்கவிளைவுகள் எப்போது ஏற்பட்டது என்றால், அவர்கள் இருந்த மருந்தை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டபோது என்பது தெரிந்தது. ஒவ்வொரு முறை மருந்து தரும்போதும், இதயத்துடிப்பு சரிபார்க்கப்பட்டது. இதில் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை என்ற நிலையிலேயே இந்த மருந்து வழங்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை வழங்குவதை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அஜித்ரோமைசின் மருந்துடன் கலந்து தரும்போது விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதேநேரத்தில் மும்பையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் தற்போதும் கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தே வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 6535 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,380 ஆக அதிகரித்துள்ளது. 4,167 பேர் மரணமடைந்துள்ளனர். நாட்டில் ஒரு லட்சம் அளவிலான மக்கள் தொகையில், 0.3 சதவீதத்திற்கு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இது சர்வதேச அளவில் மிகக்குறைவு ஆகும். சர்வதேச அளவில், ஒரு லட்சம் அளவிலான மக்கள் தொகையில், 4.4 சதவீதம் அளவிற்கு மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
மும்பை லீலாவதி மருத்துவமனையின் இதய நோயியல் நிபுணர் டாக்டர் ஜலீல் பார்கர் தெரிவித்துள்ளதாவது, தங்களது நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து பாதகமான விளைவுகளேயே ஏற்படுத்தியதால், நாங்கள் அந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் பயன்பாட்டை தவிர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாட்டியா மருத்துவமனை டாக்டர் குஞ்சான் சஞ்சலானி தெரிவித்துள்ளதாவது, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து பயன்பாட்டினால், தாங்கள் எவ்வித பாதகமான விளைவையும் கண்டறியவில்லை. இருந்தபோதிலும் இந்த மருந்தின் பயன்பாட்டை கணிசமான அளவில் குறைத்துள்ளோம். விரைவில் பயன்பாட்டை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நானாவதி மருத்துவமனை டாக்டர் ராகுல் தம்பே கூறியதாவது, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை நாங்கள், இதயநோய் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், வயதானவர்களுக்கு வழங்குவதில்லை. குறிப்பிட்ட நோயாளிகளுக்கு மட்டுமே, இந்த மருந்தை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
செவன் ஹில்ஸ் மருத்துவமனை டாக்டர் பாலகிருஷ்ணா அட்சுல் கூறியதாவது, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து வழங்கியதால் சில நோயாளிகளுக்கு சிறுநீரக பிரச்சனைகள் ஏற்பட்டன. இருந்தபோதிலும் ஐசிஎம்ஆரின் வழிகாட்டுதலின்படி இந்த மருந்தை வழங்கி வருகிறோம். எல்லா மருந்துக்கும் பக்கவிளைவுகள் இருக்கும் என்று அவர் கூறினார்.
மும்பை மாநகராட்சியின் சார்பில் இயங்கும் மருத்துவமனைகளில் லேசான அறிகுறி காணப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே ஐசிஎம்ஆரின் வழிகாட்டுதலின்படி, இம்மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
ஐசிஎம்ஆர் பரிந்துரையின் படியே, குறைந்த அளவிலேயே கொரோனா நோயாளிகளுக்கு இம்மருந்தை வழங்கி வருவதால், இந்தியாவில் பக்கவிளைவுகள் அதிகமாக ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை செயலர் பிரதீ்ப அவதே தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் செளம்யா சுவாமிநாதன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தின் பயன்பாடு, சர்வதேச நாடுகளில் பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தியுள்ளநிலையில் அதுகுறித்த மறு ஆய்வை நிகழ்த்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். ஆனால், இதற்காக யாரும் பயப்பட தேவையில்லை.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை, மருத்துவமனை நோயாளிகளுக்கும், கொரோனாவால் குணமடைந்தவர்களுக்கும் வழங்கி மீண்டும் ஆய்வு மேற்கொண்டு புதிய வழிமுறைகளை விரைவில் வெளியிட இருப்பதாக அவர் கூறினார்.