செவ்வாய், 28 ஜூலை, 2020

ஒமர் அப்துல்லா ஜம்மு – காஷ்மீர் தேர்தலில் ஏன் போட்டியிடமாட்டார்?

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு ஒரு வருடம் கிட்டத்தட்ட நிறைவடைய போகிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், பாஜகவின் இந்த முடிவு ஒன்றும் அவ்வளவு அதிர்ச்சியை தரவில்லை. ஏன் என்றால் அவர்களின் பல ஆண்டு கால தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாக இருந்தது. ஆனால் மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவித்து தரம் இழக்க செய்தது தான் மிகவும் அவமானகரமாக இருந்தது என்று இந்தியன் எக்ஸ்பிரஸின் கருத்து பகுதியில் தன்னுடைய கட்டுரையை எழுதியிருந்தார் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா. நீண்ட நாட்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட பிறகு அவர் எழுதிய முதல் கட்டுரை எதுவாகும்.


ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதே நேரத்தில் இன்றியமையாததும் கூட. மேலும் மாநில அரசு மத்திய அரசுடன் பங்கேற்பதற்கான ஒரு முக்கிய பகுதியாகும். சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்த்து என்பது ஜம்மு காஷ்மீருக்கு சாதகமான ஒன்றாக உருவாக்கப்படவில்லை. மாறாக இந்திய அரசின் ஒரு அங்கமாக மாற தேவையான அடிப்படையை உருவாக்கியது. மாநில மக்களை தண்டிப்பது மற்றும் அவமானப்படுத்துவது தவிர இந்த நடவடிக்கை எதற்காக எடுக்கப்பட்டது என்பதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை என்று கூறியுள்ளார் ஒமர் அப்துல்லா.

அந்த கட்டுரையில் அரசியல் சாசன பிரிவு 370 முழுமையான நீர்த்தலை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட பல காரணங்கள் ஏன் அடிப்படை ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை தன்னுடைய பார்வையில் எழுதியிருந்தார். லடாக் தனி யூனியன் பிரதேசமாக பிரிக்க, புத்த மதத்தை பின்பற்றும் மக்களின் கோரிக்கை என்று எடுத்துக் கொண்டாலும், ஜம்முவில் இருக்கும் மக்கள் தங்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கை லடாக்கை விட பழமையானதாகும் என்றும் அவர் கூறுகிறார்.

மத அடிப்படையில் தான் இந்த பகுதி பிரிக்கப்பட்டது என்று எடுத்துக் கொண்டாலும், லடாக்கில் இடம் பெற்றிருக்கும் லெஹ் மற்றும் கார்கில் பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்களின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் ஜம்மு காஷ்மீரை பிரிப்பதற்கு கடுமையான எதிர்ப்புகளை முன் வைத்தார்கள்.

ஜம்மு கஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியினர் ஜம்மு காஷ்மீருக்கு செய்யப்பட்டிருக்கும் நடவடிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர் கூறியுள்ளார். ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசமாக இருக்கும் வரை நான் எந்த சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட மாட்டேன். இந்த நிலத்தின் மிகவும் சக்தி வாய்ந்த சட்டமன்றத்தின் உறுப்பினராகவும், அதுவும் 6 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். ஒரு ஊனமுற்ற சபையின் உறுப்பினராக தன்னால் இருக்கவே முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.