வியாழன், 23 ஜூலை, 2020

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை ; 7 இடங்களில் விரிவுபடுத்தப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதன்கிழமை தொடங்கிவைத்தார். பினர், அவர், தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை வெற்றி பெற்றிருக்கிறது. இந்த பிளாஸ்மா வங்கி 7 இடங்களில் விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.

சுகாதாரத்துறை அமைசர் விஜயபாஸ்கர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், பிளாஸ்மா வங்கியை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிப்படைத்தவர்களை குணப்படுத்துவதில் பல்வேறு யுக்திகளை செயல்பாடுகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்.

அந்த வகையில் எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பிளாஸ்மா வங்கிக்கு முதலமைச்சரின் ரூ.2.34 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் பேரில் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த பிளாஸ்மா வங்கி மத்திய அரசின் ஐசிஎம்ஆர் சார்பாகவும் பொது சுகாதார சேவை இயக்குனரகம் மருந்து கட்டுபாடு நிர்வாகத்தின் சார்பாகவும் பரிசோதனை அடிப்படையில் நடந்தது. பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தது. இந்த பிளாஸ்மா வங்கி பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. பிளாஸ்மா நன்கொடையாளர்கள் 2 பேர் இன்று பிளாஸ்மா தானம் அளித்து தொடங்கியிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் இந்த பிளாஸ்மா வங்கியில் 7 பேர் தானம் அளிக்கக் கூடிய வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதனால், தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்திருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுவாக ஒருவருக்கு கொரோனா பாஸிட்டிவ் தொற்று ஏற்பட்டு குணமாகி அவருக்கு நெகட்டிவ் என்று பரிசோதனை முடிவு வந்த பிறகு, 14 நாட்களுக்குப் பிறகு, ரத்த தானம் செய்வதற்கு உள்ள விதிமுறைகளுடன் அவர்க்ள் பிளாஸ்மா தானம் செய்வதற்கு தகுதி உடைவர்கள் ஆகிறார்கள். இந்த பிளாஸ்மாவை நாம் 40 டிகிரி செல்சியஸ் அளவில் குளிர் நிலையில் வைத்திருப்போம். ஓராண்டு வரை இந்த பிளாஸ்மாவை பயன்படுத்துகிறோம். பிளாஸ்மா என்றால் பிளாஸ்மா மட்டும்தான் எடுப்போம். ரத்தம் கருவிக்குள் சென்று அதில் பிளாஸ்மா மட்டும் பைக்குள் வரும் ரத்தம் மீண்டும் அவர்களின் உடலுக்குள் சென்று விடும். ஆகையினால், அவர்களும் புத்துணர்ச்சியாக உணர்வார்கள்.

ஏற்கனவே, தமிழகத்தில் கண் தானமாக இருந்தாலும், ரத்த தானமாக இருந்தாலும், உடலுறுப்பு தானமாக இருந்தாலும் தானம் செய்வதில் மிகச் சிறந்த மாநிலம் தமிழ்நாடு. அதனால், இந்த பிளாஸ்மா சிகிச்சையில் முதலமைச்சர் ஏறகனவே வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஏற்கனவே, நாம் 1 லட்சத்து 21 ஆயிரம் பேர்களுக்கு மேல் குணப்படுத்தி அனுப்பியிருக்கிறோம். குணமடைந்த அனைவரும் துணை நோய் எதுவும் இல்லாதவர்கள் அனைவருமே பிளாஸ்மா கொடுப்பதற்கு தகுதி உடையவர்கள் ஆவர். அனைவரும் பிளாஸ்மா கொடுப்பதற்கு முன்வர வேண்டும் என்பதை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக அரசு தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையைத் தொடர்ந்து, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், திருச்சி, மதுரை, சேலம், கோவை, திருநெல்வேலி ஆகிய மருத்துவக் கல்லூர் மருத்துவமனைகளிலும் இந்த பிளாஸ்மா வங்கிகள் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மதுரையில் இதுவரை 4 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டு குணப்படுத்தப்பட்டிருக்கின்றனர். சாலிடாட் பரிசோதனை, டிஎன்எம்எஸ் மூலமாக ரெம்டெஸ் உயிர் காக்கும் மருந்து தருவிக்கப்பட்டு உலக சுகாதார நிறுவனத்தின் விதிப்படி சாலிடாட் பரிசோதனையும் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. ரெம்டெஸ் மருந்து பரிசோதனையும் வெற்றிகரமாக போய்க்க்கொண்டிருக்கிறது. அதனால், தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரெம்டெஸ் மருந்து வழங்கப்பட்டிருக்கிறது.

ராஜீவ் காந்தி மருத்துவமனையைப் பொருத்தவரைக்கும் 93,000 பேர்களுக்கு கொரோனா ஸ்வாப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. 9,280 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐசியுவில் இருப்பவர்கள் உணவருந்த முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு ஊட்டி விடுவதற்கு உதவி செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். உயர்தர சிகிச்சையை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளார்ந்த அன்புடன் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு முதலமைச்சரின் சார்பில் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.