ஞாயிறு, 26 ஜூலை, 2020

கொரோனாவை விட உ.பி அரசின் அலட்சியத்தால் மக்கள் அச்சம்: பிரியங்கா காந்தி கடிதம்!

Image

உத்தரபிரேதேச அரசு கொரோனா பரவலைத் தவறாக கையாண்டு,  மாநிலத்தை ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்வதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக  முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வெள்ளிக்கிழமையன்று கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,500 ஆக உயர்ந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். மாநிலத்தின் அனைத்து நகரங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கிராமப்புறங்களிலும் பரவல் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் நிலை மிக மோசமாக உள்ளதாகவும், கொரோனாவை விட மாநில அரசின் தவறான நிர்வாகத்தைக் கண்டு மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதனால் பரிசோதனைக்காக கூட அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர அஞ்சுவதாகவும் பிரியங்கா தெரிவித்துள்ளார். இது அரசின் முழுமையான தோல்வி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விளம்பரம் மற்றும் செய்திகள் மூலம் கொரோனாவை அழித்து விட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். பரிசோதனை இல்லை- கொரோனாவும் இல்லை என்ற கொள்கையை மாநில அரசு கடைப்பிடித்து வருவதாகவும், அதனால் பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. பரிசோதனைகளை அதிகப்படுத்தி வெளிப்படைத்தன்மையுடன் செயல்படாவிட்டால் போராட்டம் வெற்றி பெறாது என்றும் அவர் குறிப்பிட்டார். நிலைமை மேலும் அபாயகரமான நிலைக்குச் செல்லும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் உத்தரபிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் என்று கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள பிரியங்கா காந்தி, அப்படியிருந்தும் வாரணாசி, லக்னோ, ஆக்ரா உள்ளிட்ட இடங்களில் தற்காலிக மருத்துவமனைகள் திறக்கப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.