புதன், 22 ஜூலை, 2020

OBC இட ஒதுக்கீடு விவகாரம் : மத்திய பாஜக அரசுக்கு பாடம் கற்பிப்போம் - மு.க.ஸ்டாலின்


நாட்டில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேற விடாமல் தடுக்கும் மத்திய பாஜக அரசுக்கு பாடம் கற்பிப்போம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகநீதியை அடைவதற்கான முட்பாதையை மாற்றிப் பண்படுத்த ஜனநாயகப் போருக்குத் தயாராவோம் என தெரிவித்துள்ளார். இந்திய அரசியல் சட்டத்தால் எழுப்பப்பட்டுள்ள அடித்தளத்தின் மிக முக்கியமான சமூகநீதியை சிதைக்கும் செயலை மத்திய பாஜக அரசு தொடர்ந்து செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய பாஜக அரசு தொடர்ந்து மதவாத சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு மூலமாக பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, ஏழை எளிய மக்களின் மருத்துவக் கல்விக் கனவுக்கு சாவு மணி அடித்த பாஜக அரசுதான், மண்டல் கமிஷன் அமைத்து அறிக்கையை அமல்படுத்திய வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்தது என்பதை மறுக்க முடியாது என ஸ்டாலின்  கூறியுள்ளார்.

இந்துக்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று தொண்டை வற்றச் சப்தமிடும் பாஜகவினருக்கு பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்துக்களாகத் தெரியவில்லையா?  என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி, உரிய இடங்களை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிரதமரும், மத்திய பாஜக அரசும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.