வெள்ளி, 24 ஜூலை, 2020

கந்த சஷ்டி கவச விவகாரம் - சென்னை எழும்பூர் நீதிமன்றம் இன்று உத்தரவு!

Image

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன், செந்தில் வாசனை சைபர்கிரைம் காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக  இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. 

கந்த சஷ்டி கவசத்தை அவமதிப்பு செய்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வீடியோ வெளியிட்டது. இதுதொடர்பாக அச்சேனலின் நிர்வாகிகள் செந்தில் வாசன், சுரேந்திரன், ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம் மற்றும் வீடியோ எடிட்டர் குகன் ஆகியோர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் செந்தில் வாசன், சுரேந்திரன் ஆகிய இருவரை சைபர் கிரைம் காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனு நீதிபதி ரோஸ்லின் துரை முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில், இந்த விவகாரத்தில் நான்கு பேர் மட்டுமே கைதாகி சிறையில் உள்ளதாகவும், அவர்களுடன் பின்னணியில் யாரேனும் உள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்த 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

கறுப்பர் கூட்டம் தரப்பில், உள்நோக்கத்துடன் சிலர் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு ஏற்ப காவலில் எடுக்க மனுத்தாக்கல் செய்துள்ளதால் நீதிமன்றம் அனுமதி வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை பதிவுசெய்த நீதிபதி, இம்மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் அறிவித்துள்ளார்