ஞாயிறு, 26 ஜூலை, 2020

கொரோனா அச்சுறுத்தல்: மரத்தடியில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடர்!

கொரோனா அச்சுறுத்தலால் புதுச்சேரி வரலாற்றில் முதன்முறையாக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மரத்தடியில் அரங்கேறியுள்ளது. 

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவை புதுச்சேரி அரசு அமல்படுத்தி வருகிறது.

இதற்கிடையே புதுச்சேரி மாநிலத்தின் நடப்பு நிதியாண்டிற்கான முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய ரூ.9,000 கோடிக்கு மத்திய உள்துறை மற்றும் நிதித்துறை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மானிய கோரிக்கைகளின் விவரங்கள் துறை ரீதியாக முழுமையாக சமர்ப்பிக்கவில்லை எனக்கூறி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பட்ஜெட் உரையாற்றுவதற்கு வர மறுப்பு தெரிவித்தார். 

எனினும், புதுச்சேரி சட்டப்பேரவையில் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கூட்டத்தொடர் அறிவித்தபடி 20ம் தேதி காலை 9.30 மணிக்கு கூடியது. 10 நிமிடங்கள் வரை காத்திருந்தும் கிரண்பேடி வராததால் சட்டப்பேரவை நிகழ்வை தொடங்கிய சபாநாயகர் சிவக்கொழுந்து, துணை ஆளுநர் உரையாற்ற வரவில்லை என்பதை சுட்டிக்காட்டி அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையின் அடுத்த நிகழ்வான 2020-21 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார்.

இதனையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றிலேயே முதன்முறையாக துணைநிலை ஆளுநர் உரையின்றி பேரவை கூட்டத்தில் நிதிநிலை அறிக்கையை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அத்துடன், பல அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்தனர்.

பேரவையில் துணைநிலை ஆளுநர் உரையாற்றாதது தனக்கு வருத்தம் அளிப்பதாக தெரிவித்த முதலமைச்சர் நாராயணசாமி, எனினும், அரசியல்சாசன சட்டபடியே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

எனினும், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த 24ம் தேதி உரையாற்றியதுடன், அந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதேநேரத்தில், அன்றைய தினம் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டது.

சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்ற அறை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்ட நிலையில், பேரவை நிகழ்வுகள் அனைத்தும் வாகன நிறுத்துமிடத்தில் நடைபெறும் என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். அதன்படி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் மரத்தடியின் கீழ் பேரவை நிகழ்வுகள் அரங்கேறின.

சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பேரவைக்கூட்டம் நடைபெற்றது. அப்போது நிறை உரையாற்றிய முதலமைச்சர் நாராயணசாமி, எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், பணியாளர்களும் 7 நாட்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். வரும் திங்கட்கிழமை அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்தார்.

கொரோனா அச்சுறுத்தலால் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்படுவதாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.