வாழ்க்கை முறை, துரித உணவுகள், வளர்சிதை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறது. பெரும்பாலானோர் கணினி முன்பு பல மணி நேரம் அமர்ந்து கொண்டு வேலை செய்கிறார்கள். அதனால் உடலுக்கு போதிய இயக்கங்கள் கிடைப்பதில்லை. அதனால் உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். எடையை குறைக்க சத்தான மற்றும் கலோரி குறைவான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டால் உங்களுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்களும் கிடைக்கும்.உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் தேவையற்ற கொழுப்பை அகற்றுவதற்கு உதவுகின்றன.
ஒவ்வொரு நாளையும் உற்சாகமாக தொடங்குவதற்கு காலை உணவு அவசியம். அப்படி உணவுகள் சத்துக்களையும், உடல் எடையை குறைப்பதற்கும் உதவினால் டபுள் கொண்டாட்டம்தான். எனவே அவ்வாறான காலை உணவுகளை தற்போது காண்போம்.
ஓட்ஸ்:
ஓட்ஸ் மிக சரியான காலை உணவு. இது உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்கான ஆற்றலை கொடுக்கும். மேலும் இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது. ஓட்ஸ் உங்கள் உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கும் ஏற்ற உணவு.
வாழைப்பழம்:
வாழைப்பழங்களில் நிறைய வகைகள் இருக்கின்றன. ஒரு சில பழங்கள் உடல் எடையை அதிகரிக்க உதவும். செவ்வாழை உள்ளிட்ட பழங்கள் உடல் எடையை குறைப்பதற்கு மிக உதவுகிறது. இந்த பழத்தில் தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரண்டும் இதயத்திற்கு மிக நல்லது.
முட்டை:
எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு முட்டை ஆரோக்கியமான காலை உணவு ஆகும். அதில் அதிக அளவிலான புரதங்களும், குறைந்த அளவிலான கலோரிகளும் காணப்படுகின்றன. இதனை காலையில் சாப்பிடுவதால் அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்க முடியும்.
பெர்ரி:
பெர்ரி ருசியானது மட்டுமல்லாமல் மருத்துவ குணங்களும் நிறைந்தது. புளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி, ராஸ்பெர்ரி என பல வகைகள் இருக்கின்றன. இதில் மற்ற பழங்களை விட சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கிறது. ஆனால் அதிக அளவில் ஃபைபர் காணப்படுகிறது.
கிரீன் டீ:
இதில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடெண்டுகள் நிறைந்துள்ளன. ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அளவைக் குறைப்பதற்கு உதவுகிறது. இதன் மூலம் உங்கள் உடலுக்கு போதிய ஆற்றல் கிடைக்கும். சர்க்கரை இல்லாமல் இதனை குடித்தால் நல்ல பலன் தரும். இல்லையென்றால் எலுமிச்சை அல்லது தேன் கலந்தும் குடிக்கலாம்.
ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரைப்படி உங்கள் உடல் எடையை குறைப்பதற்கான வழிகளை மேற்கொள்ளுங்கள். தேவையற்ற மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம். உங்கள் உடலுக்கு ஏற்ற இயற்கையான உணவு, உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்துக் கொள்ளுங்கள்.