வியாழன், 23 ஜூலை, 2020

ரூ. 10 க்கு மருத்துவ சேவை.. கொரோனாவுடன் போராடி வென்ற சென்னை ரூ.10 டாக்டர் மறைந்தார்


ஏழை மக்களிடம் வெறும் 10 ரூபாய்க்கு மருத்துவ சேவை புரிந்த வந்த டாக்டர் மோகன் ரெட்டி மரணமடைந்தார். அவரின் மறைவு வில்லிவாக்கம் பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேவைகளில் சிறந்த சேவை மருத்துவம் என்பார்கள். அப்படி சொன்னால் அது மிகையும் அல்ல. ஒரு உயிரை காப்பாற்றும் வாய்ப்பு கடவுளுக்கு அடுத்தப்படியாக மருத்துவர்களிடமே உள்ளது. அதனால் தான் உயிரை காப்பாற்றும் மருத்துவரை நோயாளிகள் கடவுளுக்கு நிகராக மட்டுமில்லை கடவுளாகவே பார்க்கிறார்கள்.

இன்றைய காலத்தில் எத்தனை டாக்டர்கள் மருத்துவத்தை வியாபாரமாக பார்க்காமல் சேவையாக செய்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனால் அப்படி செய்தால் அவர்களுக்கு மக்கள் தரும் அங்கீகாரம் எப்படி இருக்கும் என்பதை இன்றைய தினம் அனைவரும் தெரிந்துக் கொள்வார்கள்.

மருத்துவத்தை தனது உயிர் நாடியாக நினைத்து வெறும் 10 ரூபாய்க்கு ஏழை நோயாளிகளுக்கு சிகிக்சை பார்த்து வந்த டாக்டர் மோகன் ரெட்டி (84) கொரோனாவால் மீண்டாலும் திடீரென காலமானார்.கொரோனா தொற்றுநோய் காலத்திலும் மக்களுக்கு இவர் ஆற்றிய சேவை மகத்தானது.

கடந்த 25ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சையின் பலனாக கொரோனாவில் இருந்து மீண்டார். ஆனால் எதிர்பாராத விதமாக சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்தார்.

இத்தகவலை அவரது சகோதரரும், மருத்துவருமான எம்.கே. ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காலத்தில் எங்களுடன் வீட்டுக்கு வந்து தங்க சொன்னோம். நான் வந்துவிட்டால் என்னை தேடி வரும் நோயாளிகளை யார் பார்த்து கொள்வது என்றார்.

டாக்டர் மோகன் ரெட்டியின் மரணம், வில்லிவாக்கம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 1936ம் ஆண்டு நெல்லூரில் பிறந்த டாக்டர் ரெட்டி, ஆரம்பக் கல்வியை குடூரில் பயின்றார்.

பின்னர் கில்பாக் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். அதன் பிறகு மருத்துவராக ஆனார். ரயில்வேயில் பணியாற்றிய பின்னர், வில்லிவாக்கத்தில் மோகன் நர்சிங் ஹோம் என்ற மருத்துவமனை ஒன்றை தொடங்கினார்.

டாக்டர் மோகன் ரெட்டி நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதோடு நின்று விடவில்லை. மேலும் அவர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு உணவும் விநியோகித்தார். அவரது பரோபகார சேவைகளுக்காக, டாக்டர் ரெட்டியை அப்போதைய தமிழக ஆளுநர் ரோசய்யா பாராட்டினார். கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் அனாதை இல்லங்களுக்கும் டாக்டர் நன்கொடை அளித்தார்.