உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 60 குழந்தைகள் இறந்தபோது, அலைந்து திரிந்து குழந்தைகளுக்கு ஆக்சிஜன் ஏற்பாடு செய்து பல உயிர்களைக் காப்பாற்றியவர் என கூறப்பட்ட டாக்டர் கஃபீல் கான் 6 மாதங்களாகச் சிறையில் உள்ளார்.
வெறுப்பைத் தூண்டும் விதமாகப் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவ செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு மாவட்டத் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீனும் வழங்கியது. ஆனால் விடுதலையாவதற்கு முன்பு, அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டு, அவர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டதையும், தேசியப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையையும் எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை என்று மருத்துவர் கஃபீலின் சகோதரர் ஆதில் அகமது கூறுகிறார்.
உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் விசாரணை இதுவரை 11 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் இப்போது ஜூலை 27 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் என்றும் ஆதில் அகமது கூறுகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், டாக்டர் கஃபீல் கான் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ)எதிராக வெறுப்பைத் தூண்டும் விதமாக உரையாற்றியதாக அலிகர் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜனவரி 29 அன்று, உத்தரப்பிரதேச அரசின் சிறப்புப் நடவடிக்கைப் படை (எஸ்.டி.எஃப்) அவரை மும்பையில் கைது செய்தது.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த டாக்டர் கஃபீலுக்கு, பிப்ரவரி 10 ம் தேதி ஜாமீன் கிடைத்தது, ஆனால் மூன்று நாட்கள் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்படவில்லை. அதற்குள், அலிகார் மாவட்ட நிர்வாகம் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகித்தது.
டாக்டர் கஃபீலை இதுவரை இரண்டு முறை உத்தரப்பிரதேச சிறப்புக் காவல் படை கைது செய்துள்ளது. உத்தரப்பிரதேச சிறப்புக் காவல் படையின் ஐ ஜி அமிதாப் யஷ், பி பி சி-யிடம் பேசியபோது, "அலிகரில் கபீல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, நாங்கள் அவரை மும்பையில் கைது செய்து அலிகார் போலீசில் ஒப்படைத்தோம். இதற்கு முன்னர், கோரக்பூரின் பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி வழக்கிலும் எஸ்.டி.எஃப் அவரைக் கைது செய்தது." என்று கூறினார்.
நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் பெற்ற போதிலும், கஃபீல் கான் மூன்று நாட்கள் வரை விடுதலை செய்யப்படாதது ஏன் மற்றும் ஜாமீன் வழங்கப்பட்ட பிறகும், அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது ஏன் என்ற கேள்விகள் எழுகின்றன.
மாநில அரசின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கஃபீலின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர், காரணம், ஜாமீன் பெற்ற பிறகு தேசியப் பாதுகாப்புச் சட்டம் விதிக்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கால அளவு மூன்று மாதங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டது.
கபீலின் சகோதரர் ஆதில் கான் இது பற்றிக் கூறும்போது "பிப்ரவரி 10 ஆம் தேதி மாலை நான்கு மணியளவில் நீதிமன்றம் கஃபீல் கானை உடனடியாக விடுவிக்குமாறு அறிவுறுத்தியது, ஆனால் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் அவர் விடுவிக்கப்படவில்லை. ஜாமீன் வழங்கிய பிறகு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்பது உச்ச நீதி மன்றத்தின் உத்தரவு."
"டாக்டர் கஃபீல் மீதான அனைத்து வழக்குகளிலும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் எப்படி பாய்ந்தது என்பது தான் புரியவில்லை" என்றார்.
"அவர் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது உயர் நீதிமன்றம்தான் சரி எது தவறு எது என்று முடிவு செய்யும்" என்று கூறுகிறது அலிகர் மாவட்ட நிர்வாகம்.
பிபிசியிடம் பேசிய அரசாங்க வழக்கறிஞர் மணீஷ் கோயல் "என்எஸ்ஏ காவல் காலத்தை அதிகரிப்பது குறித்த வழிமுறைகளை ஆலோசனைக் குழு பரிந்துரைக்கிறது, அரசாங்கம் மட்டும் அதை முடிவு செய்யவில்லை. ஆலோசனைக் குழுவில் உள்ள மூத்த உறுப்பினர்கள், சட்ட வல்லுநர்கள் உள்ளனர். தேசியப் பாதுகாப்புச் சட்டம் மூன்று மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு இது மும்மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இதை நீட்டிக்கும் முடிவு ஆலோசனைக் குழுவின் ஒப்புதலுடன் மட்டுமே செய்யப்படுகிறது. கஃபீல் கான் விஷயத்தில், தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஒரு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் குற்றச்சாட்டு மிகத் தீவிரமானது என்பதுதான். அதனால் தான் இது நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் டாக்டர் கபீல் கான் கைது செய்யப்பட்ட காலம் ஏப்ரல் 13 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது, ஆனால் ஏப்ரல் 1 ஆம் தேதி, தேசியப் பாதுகாப்புச் சட்டக் காவல் காலத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க ஆலோசனைக் குழு பரிந்துரைத்தது. டாக்டர் கபீலின் குடும்பத்தினர் அவரை கைது செய்வதற்கும் என்எஸ்ஏவின் நடவடிக்கைக்கும் எதிராக ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர், ஆனால் உச்சநீதிமன்றம் அந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது.
ஆதில் கான் கூறுகிறார், "நாங்கள் பிப்ரவரி 22 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தோம், ஆனால் அங்கிருந்து மார்ச் 18 அன்று அது உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. அதற்கு, உச்ச நீதிமன்றத்திற்கு நிறைய பணிகள் இருப்பதாகவும் இதை உயர் நீதிமன்றத்திலும் விசாரிக்க முடியும் என்றும் விளக்கம் கூறப்பட்டது. சில காரணங்களால், அரசாங்க வக்கீல்கள் வழக்கை ஒத்தி வைக்கவே கோருகின்றனர். டாக்டர் கஃபீலை விடுவிப்பது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்படவேயில்லை. மே 14 முதல் இது வரை மொத்தம் 11 முறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது."
சிறையில் கஃபீல் கானின் கடிதம்
தேசிய பாதுகாப்பு சட்டம் எந்தவொரு நபரையும் காவலில் வைக்கும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்குகிறது. இந்தச் சட்டத்தின் கீழ், எந்தவொரு நபரையும் ஒரு வருடம் வரையில் சிறையில் அடைக்க இது அதிகாரம் பெற்றது. இருப்பினும், மூன்று மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்க, ஒரு ஆலோசனைக் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
ஒரு நபரால் தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலோ அல்லது சட்டம் ஒழுங்கு சீர்கேடடையவோ வாய்ப்புள்ள நிலையில் அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சிறையில் இருந்து டாக்டர் கஃபீல் ஒரு கடிதத்தையும் எழுதியுள்ளார், அதில் சிறைக்குள் மனித தன்மையற்ற நிலைமைகள் இருப்பதாகக் குறிப்பிட்டார். டாக்டர் கஃபீலின் இந்தக் கடிதம் சமூக ஊடகங்களிலும் வைரலாகியது.
கடிதத்தில், டாக்டர் கஃபீல் 150 கைதிகளுக்கு ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது என்றும் அங்கு சாதாரண நிலையில் யாரும் உள்ளே செல்ல முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், சிறைச்சாலையில் உள்ள உணவு, குடிநீர் ஏற்பாடுகள் குறித்தும், சமூக இடைவெளி பின்பற்றப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"கொரொனா ஊரடங்கு நிலவும் இந்தக் காலத்தில், கஃபில் எவ்வாறு அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கெடுக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை. அரசியல் காரணங்களுக்காக மட்டுமே அவர் குறிவைக்கப்பட்டுள்ளார். கஃபீலுக்கு இருதய பிரச்சினைகள் உள்ளன. ஆனால் பலமுறை கோரிக்கைகள் வைத்த போதிலும், அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை".
விடுதலைக்கான போராட்டம்
டாக்டர் கஃபீலின் விடுதலைக்காக, கடந்த காலங்களில் சமூக ஊடகங்களில் பிரச்சாரம் நடத்தப்பட்டது. ஒரு சில மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ட்வீட்டுகள் செய்யப்பட்டன. புதன்கிழமை, லக்னோவில் சில வழக்கறிஞர்களும் அவரை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கஃபீலை விடுவிப்பதற்காக மாநிலம் தழுவிய பிரச்சாரத்தைத் தொடங்க காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு முடிவு செய்துள்ளது. இந்தப் பிரச்சார இயக்கத்தின் கீழ் 15 நாட்களுக்கு வீடு வீடாகச் சென்று கையெழுத்துப் பிரச்சாரம், சமூக ஊடகப் பிரச்சாரம், ரத்த தானம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்.
2017 ல் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 60 குழந்தைகள் இறந்தபோது டாக்டர் கஃபீல் பல இடங்களில் அலைந்து திரிந்து ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்ததாக செய்திகள் வெளியாயின. இது நிர்வாகத் தவறால் நடந்தது என்றும் கூறப்பட்டாலும், டாக்டர் கஃபீல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
உத்தரபிரதேச அரசு, அலட்சியப் போக்கு, ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து டாக்டர் கஃபீலை இடைநீக்கம் செய்து சிறைக்கு அனுப்பியது. இவற்றில் பல குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அரசே அவரை விடுவித்த நிலையில், அவரது இடை நீக்கம் மட்டும் இன்னும் ரத்து செய்யப்படவில்லை.