வெள்ளி, 31 ஜூலை, 2020

மும்மொழிக் கொள்கைக்கு இங்கு இடமில்லை: திமுக மாவட்டச் செயலாளர்கள் தீர்மானம்

திமுக தலைவர் மு.கஸ்டாலின் தலைமையில், நேற்று (ஜூலை 30) காணொலி வாயிலாக நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் – உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1: கலைஞர் நினைவு நாளை, தக்க வகையில் நெஞ்சில் ஏந்துவோம். கலைஞர் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் வருகின்ற 7.8.2020 அன்று வருவதையொட்டி அந்த மகத்தான தலைவரின் மாபெரும் பணிகளை, அற்புதமான அரிய சாதனைகளை பெருமையுடன் இந்தக் கூட்டம் நினைவு கூர்கிறது.

தலைவரின் இரண்டாவது நினைவு தினமான 7.8.2020 அன்று, நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்றிட இரவு பகல் பாராது கண் துஞ்சாது தங்களின் குடும்ப சுகதுக்கங்களை எல்லாம் துறந்து மறந்து, தியாக உணர்வுடன் பணியாற்றிய – பணியாற்றிவரும் “கொரோனா போராளிகள்” என்று அழைக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை ஊழியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் சிறப்பு செய்வதென்றும்; வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு ஆங்காங்கே வறுமையின் கோரப்பிடியில் சிக்கிச் சுழலும் ஏழை எளியவர்களுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்குவதென்றும்; கழக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.


தீர்மானம் 2: கலைஞர் வழி நின்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்ற சமூகநீதி வெற்றிக்குப் பாராட்டு! மத்தியத் தொகுப்பிற்கு தமிழ்நாடு அளிக்கும் மருத்துவக் கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு உரிமை உண்டு, இடஒதுக்கீடு கோரிக்கை ஆதாரபூர்வமானது (not bereft of substance) என்று, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பினை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகம் தொடுத்த சமூகநீதி சட்டப் போராட்ட வழக்கில் – இந்தத் தலைமுறை மட்டுமின்றி – எதிர்காலத் தலைமுறையையும் காப்பாற்றும் போற்றுதலுக்குரிய சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது என்றும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கின்ற தீர்ப்பு என்றும் பெருமிதம் கொள்கிறது.

தீர்மானம் 3: சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை-2020-ஐத் திரும்பப் பெறுக!.

தீர்மானம் 4. மழலையர் கல்வியைக் கூட மத்திய அரசு முடிவு செய்வதா? – பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்த்திடுக!. மத்திய அமைச்சரவையால் 29.7.2020 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள- “புதிய கல்விக் கொள்கை-2020”-ன் இறுதி வடிவத்தை உடனடியாக மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என்றும்; “தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும். மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை” என்றும்; “சமூகநீதி, மாநில உரிமைகள் ஆகியவற்றைப் புறக்கணித்து, ஒருதலைப் பட்சமானதாக அமைந்துள்ள இந்த கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்” என்றும்; அ.தி.மு.க. அரசு தீர்மானமாக உடனே அறிவித்திட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.