இட ஒதுக்கீட்டின் மீது மத்திய பாஜக அரசு நடத்தும் அநியாய தாக்குதலை பிற்படுத்தப்பட்ட சமுதாயம் நீண்ட நாட்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீட்டை, எப்படியும் ஒழித்தே தீருவது என பாஜக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இப்போது 'க்ரீமிலேயர்' வருமான வரம்பிற்கு 'நிகர சம்பளத்தை' கணக்கில் எடுத்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக வெளியாகும் செய்திகள், இடஒதுக்கீட்டின் இதயத்தில் ஈட்டி பாய்ச்சுவது போல் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1993-ம் ஆண்டு தொடங்கி, கடந்த 27 ஆண்டுகளில் இதுவரை 9 முறை க்ரீமிலேயருக்கு கணக்கிடப்படும் வருமான வரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால், இதுவரை நான்கு முறை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 2015-ம் ஆண்டிலேயே “க்ரீமிலேயர் வருமான வரம்பு ரூ.15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்” என்று பரிந்துரையை வழங்கியிருந்தது என்று மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான நாடாளுமன்றக் குழு க்ரீமிலேயர் வருமான வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரை அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் 27% இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்தவும், க்ரீமிலேயர் வருமான வரம்பை ரத்து செய்யவும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் ஏகப் பிரதிநிதி என்று தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ள பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.