வியாழன், 23 ஜூலை, 2020

தேர்வு முடிவுகள்: பின்தங்கிய கடலூர் மாவட்டம்!

கல்வியாளர்கள் பலரை உருவாக்கிய கடலூர் மாவட்டம், +2 தேர்வு முடிவில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு வரலாற்று சிறப்புகளை உடையது கடலூர் மாவட்டம். பல கல்வியாளர்களை உருவாக்கி, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மூலம் கல்விக் கேந்திரமாகவும் விளங்குகிறது. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பின் தங்கியே இருப்பது கல்வியாளர்களை கவலை அடையச் செய்துள்ளது. 

அண்மையில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், மாநில அளவில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது கடலூர் மாவட்டம். கடந்த  2008-09ம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில் 74.66% தேர்ச்சி பெற்று மாநில பட்டியலில் கடைசி இடம் பிடித்தது. கடந்த 2018-19 கல்வி ஆண்டில் 26 வது இடம் பெற்ற நிலையில், இந்த ஆண்டு கடைசி இடத்தை பிடித்து மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 
கடலூர் மாவட்டம் கல்வியில் மேம்பட ஆசிரியர்கள் கடமைக்கு என்று இல்லாமல், ஈடுபாட்டுடன் கற்பித்தல் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல, தலைமை ஆசிரியர், மாணவர், பெற்றோர் அனைவரும் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். 

அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் உள்ளனரா, குறித்த நேரத்திற்கு ஆசிரியர்கள் வருகிறார்களா என்பதை கல்வித்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, குறைபாடுகளை கலைந்தால், மட்டுமே கடலூர் மாவட்டம் தேர்ச்சி பட்டியலில் முன்னேற முடியும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.