வெள்ளி, 24 ஜூலை, 2020

194 நாட்களுக்கு பிறகு உடலில் என்ன நடக்கும்?

இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசியான கோவாக்சின் மனிதர்கள் மீதான பரிசோதனைக்கு அனுமதி பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த பரிசோதனை காட்டான்குளத்தூரில் அமைந்த எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் நடைபெற அனுமதி பெறப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று காலை முதல் இந்த பரிசோதனை தொடங்கியது.

நேற்று மருத்துவமனையில் கோவேக்சின் தடுப்பு மருந்தை 2 தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது.
இதற்காக உடல் தகுதியுடைய நபர்களை கண்டறிந்து தயார்படுத்தும் பணி கடந்த 2 வாரமாக நடைப்பெற்றது.
இந்த பரிசோதனையில் பங்கேற்கவுள்ள நபர்களுக்கு முதலில் கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கிறதா என்ற சோதனை நடத்தப்பட்டன.

இதய நோய் உள்ளிட்ட பிற ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களா? எனவும் பரிசோதனை செய்யப்பட்டது. இவ்வாறு பரிசோதனையில் பங்கேற்கும் நபர், சோதனை காலகட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகாமல் தற்காப்புடன் இருக்க வேண்டும். 194 நாட்களுக்கு பிறகு அவருடைய உடலில் கொரோனா வைரஸ் எதிர்ப்புக்கான ஆண்டிபாடி என்று அழைக்கப்படும் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதா? என சோதனை செய்யப்படும்.

மருந்து செலுத்தப்பட்ட பின், ஆறு மாதம் வரை கண்காணிக்கப்படுவர். 18 வயதில் இருந்து, 55 வயதிற்கு உட்பட்ட தன்னார்வலர்கள் இந்த சோதனையில் கலந்துக் கொண்டுள்ளனர். தன்னார்வலர்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

பரிசோதனை முடிவுகள் அனைத்தும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் தெரிவிக்கப்படும். இது 6 மாதகாலம் நடக்கும். தன்னார்வலர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் செலவுக்கு பணமும், காப்பீடும் வழங்கியுள்ளது. நேற்று 2 தன்னார்வலர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை குறித்து பரிசோதனையை முன்னெடுக்கும் டாக்டர் சத்யஜித் மாபத்ரா ‘2 தன்னார்வலர்களுக்கு தடுப்புமருந்து செலுத்தினோம். அவர்கள் தற்போது நலமுடன் இருக்கிறார்கள். பரிசோதனைமுடிவு வந்தபிறகுதான் எதையும் முழுவதுமாக சொல்லமுடியும்’ என்றார்.