வியாழன், 30 ஜூலை, 2020

வனத்துறை விசாரணையில் உயிரிழந்த விவசாயி; மறு உடற்கூறாய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு

வனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த தென்காசி விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், வாகைக்குளத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து. இவர் தனது தோட்டத்தில் மின் வேலி அமைத்துள்ளார். இது தொடர்பாக விசாரிக்க விவசாயி அணைக்கரை முத்துவை வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது, விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்தார்.

வனத்துறையினர் தாக்கியதால்தான் விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்தார் என்று புகார் கூறி அவருடைய மனைவி பாலம்மாள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில், அணைக்கரை முத்துவின் உடற் கூறாய்வு அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது நீதிபதி பொங்கியப்பன், உயிரிழந்த விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை விதியை மீரி இரவில் உடற்கூறாய்வு செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், சட்டம் ஒழுங்கு பிரச்னையை தடுக்க இரவில் உடற்கூறாய்வு செய்ததாக தெரிவித்தார்.

பின்னர், நீதிபதி, விவசாயி அணைக்கரை முத்துவின் உடலில் 4 இடங்களில் காயங்கள் இருப்பதாக உடற்கூறாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மனுதாரர் பாலம்மாள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விவசாயி அணைக்கரை முத்துவின் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்து அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் தெரிவித்து கையெழுத்து பெற்றுள்ளார் என்று தெரிவித்தனர்.

மனுதாரரின் வாதங்களைக் கேட்ட நீதிபதி விசாரணையை ஜூலை 30ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதன்படி, இந்த வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வனத்துறையினர் விசாரணையில் உயிரிழந்த விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட்டார். மேலும், நெல்லை, தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த 3 மூத்த மருத்துவர்களைக் கொண்டு மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.