வியாழன், 30 ஜூலை, 2020

தேசிய கல்விக் கொள்கை: ஆர்.ஆர்.எஸ் கணக்கு பலித்ததா?

நேற்று, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த தேசிய கல்விக் கொள்கை உருவாக்கும் பணியின் போது மேற்கொள்ளப்பட்ட ஆலோசனை செயல்முறைகளில், ஆர்.எஸ்.எஸ்- ன் குரல் முக்கியத்துவம் பெற்றது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இணை நிறுவனங்கள், கல்விக் கொள்கை வரைவு செயல்முறையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டன. ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டாளர்கள், பாஜக ஆளும் சில மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், அரசாங்கத்தின் பிரதிநிதிகள், புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழுத் தலைவர் கே கஸ்தூரிரங்கன் ஆகியோருக்கு இடையே சந்திப்புகள் நடைபெற்றது.

இருப்பினும், நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை, அந்தரத்தில் கட்டப்பட்ட ஒரு மெல்லிய அரசியல் கயிற்றில் அரசாங்கம்  நடைபோட்டிருப்பதைக் காட்டுகிறது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை கல்வி அமைச்சகம் என்று மறுபெயரிடப்படும் என்ற அறிவிப்பு ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய சலுகையாக எடுத்துக் கொள்ளலாம் . எனினும், இந்த சலுகை, அதிகம்  உள்ளடக்கம் இல்லாத, ஒரு குறியீடு அளவில் ( more symbolic than substantive என்று சொல்லுவார்கள்) தான் உள்ளது.

குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரையிலும் , ஆனால் 8-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் முன்னுரிமை அடிப்படையிலும் , தாய்மொழி/ உள்ளூர் மொழி/ பிராந்திய மொழி , பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என கொள்கையில் வலியுறித்தியதன் மூலம் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளில் இருந்து மத்திய அரசு பின் வாங்கியுள்ளது.

6 ஆம் வகுப்பில், இந்தி மொழி மாணவர்களுக்கு கட்டாயம்  கற்பிக்கப்படும் என்ற முந்தைய நிலைபாட்டை புதிய கல்விக் கொள்கையில் அரசாங்கம் கைவிட்டது. அரசியல் கட்சிகளிடமிருந்து, முக்கியமாக தமிழ்நாட்டில் இருந்து வந்த எதிர்ப்பை அடுத்து, எந்த மாணவர் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படமாட்டாது என்று புதிய கல்விக் கொள்கையில் அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

கடந்த ஆண்டு மே 31 அன்று அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட வரைவு தேசிய கல்விக் கொள்கையில் : “நெகிழ்வுத்தன்மையின் கொள்கையின்படி, இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள 6 ஆம் வகுப்பு மாணவர்கள்  தங்கள் மும்மொழித் திட்டத்தில் ஏதேனும் ஒரு மொழியை மாற்ற விரும்பினால், இந்தி, ஆங்கிலம்  மற்றும் இந்தியாவின் பிற பிராந்தியங்களில் பேசப்படும் நவீன மொழிகளில் ஒன்றை படிப்பதை உறுதி செய்யக்வேண்டும்.  அதே நேரத்தில், இந்தி அல்லாத மொழிகள் பேசும் மாநிலங்களில் உள்ள மாணவர்கள், மும்மொழித் திட்டத்தின் கீழ் இந்தி, ஆங்கிலம் மற்றும் ஒரு பிராந்திய மொழி தேர்ந்தெடுத்து படிப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், நேற்று அமைச்சரவை ஒப்புதல் அளித்த இறுதி தேசிய கல்விக்  கொள்கையில், மாநிலங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. “எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது” என்று கூறுகிறது.

“மாநிலங்கள், பிராந்தியங்கள் மற்றும் அந்தந்த மாணவர்களின்  விருப்பத்திற்கு ஏற்ப  மொழிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பை புதிய கல்விக் கொள்கை வழங்குகிறது. மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டிருக்க வேண்டும்” என்று கொள்கை கூறுகிறது.

ராஷ்டிரிய சுயம்சேவக் அமைப்பின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியல், இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களை திறப்பதற்கான வாய்ப்பை மத்திய அரசு உருவக்கியது. புதிய கல்விக் கொள்கையில், ” புதிய சட்டம் இயற்றப்பட்டு, உலகின் சிறந்த 100 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் செயல்பட ‘வசதி’ செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

“பண்டைய இந்தியாவின் பாரம்பரியம் ” தொடர்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின்  கோரிக்கை கல்விக் கொள்கையில் சேர்க்கப்பட்டாலும், “இந்த கூறுகள், பள்ளி பாடத்திட்டம் முழுவதும் துல்லியமான மற்றும் விஞ்ஞான முறையில் பொருத்தமான இடங்களில் இணைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இணை நிறுவனங்கள் சில, ” தங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும்,  புதிய தேசிய கல்விக் கொள்கை மகிழ்ச்சி அளிப்பதாகவும்” தெரிவித்தன.

source: https://tamil.indianexpress.com/education-jobs/three-language-formula-in-new-education-policy-rss-affiliates-are-happy-with-the-nep-2020-210939/