புதன், 29 ஜூலை, 2020

பிளாஸ்மா சிகிச்சை: தமிழ்நாட்டில் எப்படி செய்யப்படுகிறது? ஒருவர் எப்போது பிளாஸ்மாக்களை தானமளிக்கலாம்?

ஊநீர் சிகிச்சை

கோவிட் - 19 நோயால் மிதமான அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஏற்கனவே இந்நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்த பிளாஸ்மாவை அளிப்பதன் மூலம் குணப்படுத்த முடியுமா என்பதைச் சோதிப்பதற்கான முயற்சிகள் மே மாதம் 11ஆம் தேதியன்று ஐசிஎம்ஆர் பார்வையின் கீழ் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துவங்கப்பட்டன.

இதற்குப் பிறகு சில நாட்களுக்கு முன்பாக அரசு இது தொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் 26 பேருக்கு பிளாஸ்மா அளிக்கப்பட்டதில், 24 பேர் முழுமையாகக் குணமடைந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் 2.34 கோடி ரூபாய் செலவில் பிளாஸ்மா வங்கி ஒன்றை மாநில சுகாதாரத்துறை அமைத்தது.

தமிழ்நாட்டில் பிளாஸ்மா சிகிச்சை எப்படிச் செய்யப்படுகிறது?

"கோவிட் - 19 வந்தவர்களுக்கான antibody, பிளாஸ்மாவில்தான் இருக்கும். ஆகவே அதனைச் சேகரித்து, தற்போது நோயாளிகளுக்குக் கொடுக்கிறோம். முதலில் ஐசிஎம்ஆர் மேற்பார்வையில் சோதனை முயற்சியில் இதனைச் செய்தோம். இதன் இறுதி முடிவுகளை அந்த அமைப்பு விரைவில் வெளியிடும். இருந்தபோதும் இந்த சிகிச்சையை நாங்கள் தொடர்ந்து அளிக்க முடியும்" என்கிறார் ரத்தமாற்று சிகிச்சைத் துறையின் தலைவரான டாக்டர் சுபாஷ்.

எப்போது பிளாஸ்மாக்களை தானமளிக்கலாம்?

ஒருவர் கோவிட் - 19 நோயிலிருந்து குணமடைந்து 14 நாட்கள் கழிந்த பிறகு, பிளாஸ்மாவை தானமளிக்கலாம். ஆனால், சர்க்கரை நோய், புற்று நோய் போன்ற இணை நோய்கள் இருக்கக்கூடாது. இவர்களுக்கு கோவிட் - 19 நோயினால் ஏற்பட்ட antibody இருக்கிறதா என்பது சோதிக்கப்படுகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில், அவர்களிடமிருந்து 500 மிலி அளவுக்கு பிளாஸ்மா எடுக்கப்படுகிறது.

ஆனால், பிளாஸ்மாவுக்கான கொடையாளிகளைத் தேர்வுசெய்வது அவ்வளவு சுலபமான காரியமாக இருப்பதில்லை. 750- 800 பேரைத் தொடர்பு கொண்டால்தான் 35 - 40 பேர்வரையிலான கொடையாளிகள் கிடைக்கிறார்கள்.

இந்தக் கொடையாளிகளிடமிருந்து ரத்தம் முழுமையாகப் பெறப்படுவதில்லை. கொடையாளியிடமிருந்து பெறப்படும் ரத்தத்திலிருந்து பிளாஸ்மா, Apheresis என்ற எந்திரத்தின் மூலம் தனியாக பிரித்தெடுக்கப்பட்டுத்தான் சேகரிக்கப்படுகிறது. மீதமுள்ள ரத்தம் மீண்டும் கொடையாளிக்கே திரும்பச் செலுத்தப்படுகிறது. கோவிட் - 19 நோயிலிருந்து மீண்டவர்களிடம் முழுமையான ரத்தத்தைப் பெறுவது என்பது அவர்களை மேலும் பலவீனமாக்கும் என்பதால் முழுமையான ரத்தத்தைப் பெறுவதில்லை.

"இந்த பிளாஸ்மாவை மிதமான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு அளிக்க முடியும். ஆக்ஸிஜன் உள்ளிழுப்பு 90க்குக் கீழே குறைந்து, ஸ்டீராய்டுகளுக்கும் பெரிய பலன் இல்லாத நிலையில், இந்த பிளாஸ்மா சிகிச்சையை அளிப்போம்" என்கிறார் சுபாஷ். இப்படி கொடையாளிகளிடமிருந்து பெறப்படும் பிளாஸ்மா, இரண்டு தடவைகளாக நோயாளிக்குச் செலுத்தப்படுகிறது.

"கொடையாளியின் பிளாஸ்மாவில் உள்ள Immunoglobulin G (IgG) என்ற antibody, அப்போதுதான் உருவாகிவரும் Immunoglobulin M (IgM)ஐ சமன்படுத்தும். இதற்குப் பிறகு நோயாளியின் உடலில் உள்ள வைரஸ் தாக்குதல் குறைந்து, நோயாளிகள் 48 நாட்களுக்குள் மீள முடியும். ஆனால், எல்லா நோயாளிகளுக்கும் இந்த சிகிச்சை தேவையில்லை. வழக்கமான மருந்துகளுக்கு உடல் சரியாக எதிர்வினையாற்றாத நிலையில், இந்த சிகிச்சையை அளிக்கலாம்" என்கிறார் ரத்தமாற்று சிகிச்சை நிபுணரான டாக்டர் லதா.