கொரோனா தொற்று ஏற்பட்டால் அச்சப்பட தேவையில்லை என்று கொரோனா சிகிச்சையில் உள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் கொரோனா தொற்று ஏற்பட்டு போபாலில் உள்ள சிராயு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை பெற்று வரும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். வீடியோவில் பேசியுள்ள அவர், தன் உடல்நிலை மிகவும் நன்றாக உள்ளதாக கூறியுள்ளார். உயிரைத் துச்சமாக நினைத்து, தன்னலம் பாராமல் கொரோனாவை எதிர்த்துப் போராடும் முன்களப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வு விலைமதிப்பில்லாதது என்றும் பாராட்டியுள்ளார்.
நோயாளிகளைக் காக்க பாடுபடும் மாநில கொரோனா தடுப்பு போராளிகளுக்கு தலைவணங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், ’கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. கொரோனா அறிகுறிகள் இருந்தால் மறைக்கக் கூடாது. உடனடியாக மருத்துவர்களிடம் தெரிவித்து சிகிச்சை பெறத் தொடங்குங்கள். உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சையானது உங்கள் உடல்நலனை பாதுகாக்கும்’ என்று அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் 2 மீட்டர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ள முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கொரோனாவைத் தடுக்க இம்மூன்றும்தான் மிகப் பெரிய ஆயுதங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை தங்கள் அன்புக்குரியவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார்.