புதன், 22 ஜூலை, 2020

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு - சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை!

Image

இரட்டை கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்திலும், இறந்த வியாபாரிகள் இல்லத்திலும் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர்.

சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை, மகன் கொலை வழக்கில் 2வது கட்டமாக கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்களான செல்லதுரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்துள்ளனர். மதுரை சிபிஐ அலுவலகத்தில் விடிய விடிய 3 பேரிடமும் விசாரணை நடத்திய நிலையில், மதுரையிலிருந்து சாத்தான்குளத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர். 

ஜெயராஜ், பென்னிக்ஸ் விசாரணைக்கு அழைத்துவரப்பட்டபோது, ஏதேனும் விதிமீறல்கள் நடைபெற்றதா எனவும், காவல்நிலைய சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டது குறித்தும், 3 பேரின் தொலைபேசி உரையாடல்கள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் செயல்பாடுகள் குறித்தும்,  விசாரணையின்போது காவலர்கள் தவிர்த்து, வேறு யாரும் இருந்தார்களா என்ற கேள்விகளின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் சுமார் இரண்டு மணி நேரமாக விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே மற்றொரு சிபிஐ குழு, ஜெயராஜ் இல்லத்திற்கும் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக ஜெயராஜின் மனைவி மற்றும் அவரது மகளிடமும் விசாரித்தனர்.