Russian vaccine to be ready by August 12 : ரஷ்யாவில் உருவாகி வரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து மீண்டும் ஒரு முறை தலைப்பு செய்தியாகியுள்ளது. ப்ளூம்பெர்க் வெளியிட்ட செய்தியின் படி ரஷ்யா, கொரோனா வைரஸிற்கு எதிராக தயாரித்திருக்கும் மருந்தை வருகின்ற ஆகஸ்ட் 10-12 தேதிக்குள் பதிவு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Gamaleya Research Institute of Epidemiology and Microbiology என்ற ஆராய்ச்சி நிறுவனம் மாஸ்கோவில் இந்த மருந்தினை தயாரித்து உள்ளது. மருத்துவ கட்டுப்பாட்டாளர்களால் இந்த மருந்து பதிவு செய்யப்பட்டவுடன் 3 முதல் 7 நாட்களில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மாதத்தின் ஆரம்பத்தில், இதே தடுப்பூசி தான் மனிதர்கள் மீதான சோதனையில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று அறிவித்தது. அது ஜூலை 2ம் வாரத்தில் அறிவிக்கப்பட்ட தகவல். ஆனால் அப்போது மனிதர்கள் மீதான சோதனையின் முதல் கட்டத்தை தான் அடைந்திருந்தது. ஜூலை 13ம் தேதி தான் இரண்டாம் கட்ட சோதனைகளை துவங்கியது என்று TASS செய்தி நிறுவனம் அறிவித்திருந்தது.
மூன்று கட்ட சோதனைகளை முடிக்காத வரையில் எந்தவிதமான தடுப்பூசிகளுக்கும் அனுமதி கிடைக்காது. சாதாரண நாட்களில், ஒரு தடுப்பூசிக்கான அனுமதியை பெறவும், சோதனையை
மேற்கொள்ளவும் அதிக நாட்கள் தேவைப்படும். இதனை பார்க்கையில் ரஷ்யா இரண்டாம் கட்ட சோதனைகளை உடனடியாக முடிக்க திட்டமிட்டுள்ளது என்றும், மூன்றாம் கட்ட சோதனைகளை மேற்கொள்வதற்கு முன்பே மக்கள் மீது பயன்படுத்த திட்டமிட்டிருப்பதும் தெளிவாகிறது. கேம்லயா தடுப்பூசி நிபந்தனையின் அடிப்படையில் பதிவு செய்ய உள்ளது என்று ப்ளூம்பெர்க் செய்தி அறிவிக்கிறது. இந்த தடுப்பூசி செப்டம்பர் மாதம் முதல் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. க்ளினிக்கல் ட்ரையல்கள் முடியும் வரை இந்த தடுப்பூசியை துறைசார் வல்லுநர்கள் இன்றி வேறு யாரும் பயன்படுத்த இயலாது என்பது தெளிவாகிறஹ்டு.
முதற்கட்ட சோதனை தடுப்பூசி பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்கிறது. வெகு சிலருக்கே முதன்மை சோதனை மேற்கொள்ளப்படும். சில வாரங்கள் துவங்கி சில மாதங்கள் வரை இந்த சோதனை நிகழும். இரண்டாம் கட்ட சோதனை மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையில் சோதிக்கப்படும். இந்த சோதனை சில நூற்றுக் கணக்கான மனிதர்களிடம் மேற்கொள்ளப்படும். மூன்றாம் கட்ட சோதனை ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் மீது இரண்டு விதமாக சோதிக்கப்படும். ஒரு பகுதியினருக்கு தடுப்பூசியும், மற்றொரு தரப்பினருக்கு டம்மி வேக்ஸினும் வழங்கப்படும். தன்னார்வலர்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ள துவங்குவார்கள். நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அவர்கள் பெற்றிருக்கிறார்களா என்பது பரிசோதனை செய்யப்படும். இந்த சோதனையும் சில மாதங்களுக்கு நடைபெறும்.
ஆராய்ச்சியாளர்கள், அவசர கதியில் கொரோனா வைரஸிற்கு மருந்து தயாரிப்பது குறித்து அச்சம் தெரிவித்தனர். அனைவரின் பாதுகாப்பையும் மனதில் கொண்டு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளுங்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்தியர்கள் மீதான ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தின் தடுப்பூசி சோதனை திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
புனேவை தலைமையகமாக கொண்ட சீரம் இன்ஸ்ட்டியூட் நிறுவனம், இந்தியர்கள் மீது ஆக்ஸ்ஃபோர்ட் நிறுவனத்தின் தடுப்பூசியை சோதிக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த நிறுவனத்தின் ஒப்புதலல் படிவத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நிறுவனத்திடம் அறிவித்துள்ளது. இந்தியர்கள் மீது ஆக்ஸ்ஃபோர்டின் தடுப்பூசி சோதனைக்கு எப்போது வரும் என்பது இன்னும் தெளிவற்ற நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தடுப்பூசி எத்தகையது?
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேக்கா நிறுவனம் ஒன்றிணைந்து தயாரித்துள்ள இந்த தடுப்பூசி சிம்பான்ஸியின் பலவீனமாக்கப்பட்ட வைரஸை பயன்படுத்தி மனித உடலில் கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தை உருவாக்க கோட் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்பைக் புரதம் உருவாக்கப்பட்ட உடனே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறதா, வெளியில் இருந்து மனித உடலை தாக்க வரும் நுண்ணுயிரியை அழிக்கிறதா என்று சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனித பரிசோதனையின் இறுதி கட்டத்தில் இந்த தடுப்பூசி உள்ளது. ப்ரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மனிதர்கள் மீது சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சீரம் நிறுவனம் இந்த தடுப்பூசியை குறைந்த விலைக்கு தயாரித்து உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த நிறுவனத்திற்கான ஒப்புதல் படிவத்தை ஏன் குழு மாற்றம் செய்ய உத்தரவிட்டிருக்கிறது?
இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு Central Drugs Standard Control Organisation (CDSCO), எக்ஸ்பெர்ட் கமிட்டியின் பரிந்துரைகளின் அடிப்படையில் சீரம் நிறுவனத்தின் ஒப்புதல் மீது முடிவுகளை மேற்கொண்டுள்ளது. தன்னுடைய வேண்டுகோள் படிவத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை 1600 நபர்களிடம் மேற்கொள்ள கோரிக்கை விடுத்திருந்தது. இந்த இரண்டு பரிசோதனைகளுக்கான எல்லை நிர்ணயம் குறித்து விளக்கம் கோரியிருந்தது எஸ்.இ.சி. மேலும் சோதனை தளங்களை இந்நிறுவனம் மும்பை மற்றும் புனேவில் மட்டும் தான் மேற்கொள்ளுமா என்பதில் தெளிவு இன்னும் கிட்டவில்லை. நாடு முழுவதும் சோதனைகளை பரவலாக்குங்கள் என்று எஸ்.இ.சி. கூறியுள்ளது. சீரம் நிறுவனத்தின் விண்ணப்பத்தில், தன்னார்வலர்களின் உடலில் தடுப்பூசியின் சோதனையை மதிப்பிடுவதற்கான முறைகள் உள்ளிட்ட 8 திருத்தங்களை மேற்கொள்ள எஸ்.இ.சி. உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது சீரம் நிறுவனம் மீண்டும் தங்களின் விண்ணப்பத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். எஸ்.இ.சி. அதில் நிறைவடைந்தால் மனிதர்கள் மீதான சோதனைக்கு பரிந்துரை செய்யும். அதன் பின்னர் இந்திய மருந்து கட்டுப்பாளர் அமைப்பு மனிதர்கள் மீது சோதனைகளை நடத்த உத்தரவு பிறப்பிக்கும்.
மாடெர்னா நிறுவனத்தின் தடுப்பூசி
மாடெர்னா தடுப்பூசி விலங்குகளில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளது என்று ஆய்வு முடிவுகள் அறிவிக்கிறது. மாடெர்னா நிறுவனம் நடத்திய ப்ரீ க்ளினிக்கல் ட்ரையலின் தரவை பத்திரிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளது. நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை வைரஸிற்கு எதிராக உருவாக்கியுள்ளது என்று அறிவித்துள்ளது. ப்ரீ க்ளினிக்கல் ட்ரையல்கள் விலங்குகளின் மீது நடத்தப்பட்டுள்ளது. அது வெற்றி அடையும் பட்சத்தில் மூன்று கட்டங்களாக விலங்குகளுக்கு சோதனை மேற்கொள்ளப்படும்.
இந்நிறுவனத்தின் தடுப்பூசிக்கு d mRNA-1273 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. மூன்றாவது மற்றும் இறுதி கட்ட மனிதர்கள் மீதான சோதனை முயற்சிகளுக்குள் இவை இறங்கியுள்ளது. ஆனால் இவை அனைத்தும் முதற்கட்ட தரவுகள் தான். மனித உடல்களில் இவை ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை அறிய மேலும் பல வாரங்கள் ஆகலாம்.
ப்ரீ க்ளினிக்கல் ட்ரையலுக்காக முதன்முதலில் அனுமதி வாங்கிய நிறுவனம் இது தான். பிப்ரவரி மாதத்திலேயே விலங்குகள் மீது இரண்டு முறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. மனிதர்கள் அல்லாத விலங்குகளுக்கு இதனை கொடுத்து சோதனை நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் தி நியூ இங்கிலாந்து பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.
இந்த முக்கியமான ப்ரீ கிளினிக்கல் ஆய்வு, மனிதரல்லாத விலங்குகளை mRNA-1273 அதிக அளவு SARS-CoV-2 நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது, அனைத்து விலங்குகளிலும் நுரையீரல் நோயைத் தடுக்கும் என்றும், mRNA-1273 இன் மருத்துவ முன்னேற்றத்திற்கு மேலும் துணைபுரிகிறது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மனிதர்கள் மீது நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையின் இடைக்கால பகுப்பாய்வு மனிதர்களிடத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தடுப்பூசி சோதனையில்
மனிதர்கள் மீதான சோதனையை 25 நிறுவனங்கள் செய்து வருகின்றன.
மூன்றாம் கட்ட சோதனையில் மூன்று நிறுவனங்கள் உள்ளன.
139 தடுப்பூசிகள் ப்ரீ க்ளினிக்கல் ட்ரையலில் உள்ளது
இரண்டு இந்திய மருந்துகள் முதற்கட்ட சோதனையில் உள்ளது.