வியாழன், 23 ஜூலை, 2020

ஓ.பி.சி. இடஒதுக்கீடு விவகாரம்: பாமக - சி.பி.எம். இடையே கருத்து மோதல்!

ஓ.பி.சி. இடஒதுக்கீடு விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது.

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. 

இந்த நிலையில், மருத்துவப்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் பாமக குறுக்குச்சால் ஓட்டுவது ஏன்? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் பிற்பட்டோருக்கான 50% இட ஒதுக்கீட்டை வழங்காமல் மத்திய அரசு ஏமாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  

மத்திய அரசின் சமூகநீதிக்கு எதிரான போக்கைக் கண்டித்து  தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் திரண்டு குரல்கொடுக்க முன்வந்திருப்பது பாரட்டத்தகுந்தது என்றும்,  சமூகநீதி பேசும் பாட்டாளி மக்கள் கட்சி பிற்படுத்தபட்ட மக்களின் உரிமையை விட்டுக்கொடுக்கும் வகையில் நீதி மன்றத்தில் வாதாடுவது வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்கும் செயலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓ.பி.சி. இடஒதுக்கீடு தொடர்பாக பாமக-வுக்கு சி.பி.எம். பாடம் நடத்தத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராடத் தயாரா என்றும், சாதிவாரி இட ஒதுக்கீடு விவகாரத்தில் அக்கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது உட்பட 4 கேள்விகளை அவர் கேட்டுள்ளார். 

சமூக நீதி, இட ஒதுக்கீடு தொடர்பாக பாமகவுக்கு பாடம் நடத்த முயற்சிக்க வேண்டாம் என்றும் அந்த விஷயத்தில் கே.பாலகிருஷ்ணனும், மார்க்சிஸ்டும் பத்தாம் வகுப்பைத்  தாண்டாதவர்கள் என்றால், மருத்துவர் ராமதாஸ் பல்கலைக் கழகம் என்றும் ஜி.கே.மணி குறிப்பிட்டுள்ளார். சந்தேகம் இருந்தால் இடதுசாரி கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, ராசா ஆகியோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்றும் பாமக தலைவர் ஜி.கே.மணி காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.