பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வயிற்று வலிகள் பெரும் பிரச்னையாக அமைகிறது. இது அவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வடைய வைக்கிறது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல்நல பிரச்னைகள் அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொரு பெண்களுக்கும் வேறுபடுகிறது. வயிற்று வலி, முதுகுவலி, கால்வலி, பசியின்மை, உடல் சோர்வு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகிறது.
இந்த வலிகளில் இருந்து தப்பிக்க பெரும்பாலானோர் மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். இது தவறான பழக்கம். இதனால் உங்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் இயற்கையான உணவு முறைகளால் உங்கள் வலியை சரி செய்வது நல்லது. முடிந்தவரை நல்ல ஓய்வு மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டாலே வலியில் இருந்து விடுபடலாம். உடல் சூடு அதிகரிப்பதால்தான் வயிற்று வலி அதிகமாக இருக்கிறது. அதனால் உடல் சூட்டை தணிக்கும் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரே நிலையில் அதிக நேரம் உட்காரவோ, நிற்கவோ, படுக்கவோ வேண்டாம். தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலமும் உடல் சூட்டை தணிக்கலாம். ஆனால் உங்கள் உடலுக்கு இது சரிவருமா என்பதை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். எனவே மாதவிடாய் வயிற்று வலியை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் குறித்து காணலாம்.
தண்ணீர் மூலம் போக்கலாம்:
வலியில் இருந்து விடுபட அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக நீர்ச்சத்து உள்ள பழங்கள், காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம். வெந்தயத்தை ஊற வைத்தோ, அல்லது பொடியாகவோ காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். தண்ணீரை இளஞ்சூடாக குடித்தால் வயிற்று வலி குறையும். உங்கள் உடம்பில் நீர்ச்சத்து குறையாத அளவுக்கு அதற்கேற்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
டார்க் சாக்லேட்:
மற்ற சாக்லேட்களை விட டார்க் சாக்லேட்டை எடுத்துக் கொள்வது நல்லது. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் ஃபைபர் உங்கள் உடல்நலத்திற்கு உதவும்
கீரைகள்:
மாதவிடாய் காலங்களில் உங்கல் உடம்பில் இரும்பு சத்து குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனால் கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் வைட்டமின் சத்துக்களும் உங்கள் உடலுக்கு கிடைக்கும்.
முட்டை:
முட்டையில் வைட்டமின் B6, D, E காணப்படுகின்றன. இந்த சத்துக்கள் உங்கள் உடலுக்கு வலிமையை கொடுக்கும். மேலும் இதில் உள்ள புரதச் சத்து வலியில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளவும் உதவும்.
இஞ்சி:
இஞ்சியை தண்ணீரில் சேர்த்து 5 நிமிடம் நன்றாக கொதிக்கவைக்கவும். அதன் பிறகு அதனை வடிகட்டி தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குடிக்கவும். இந்த இஞ்சி கரைசலை நாள் ஒன்றுக்கு 2 வேளை குடித்து வர வயிற்று வலி குணமாகும்.
பெருஞ்சீரகம்:
நீரில் ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். அதன்பிறது அதனை வடிகட்டி குடித்தால் வலி குணமாகும். பெருஞ்சீரகத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கருப்பையில் உள்ள தசைகளை தளர்த்த உதவுகிறது.
இலவங்கப்பட்டை:
இலவங்கப்படையை நீரில் கொதிக்க வைத்து அதனை குடிக்கலாம். மாதவிடாய் வலியில் இருந்து விடுபட இது உதவும். மாதவிடாயின் முதல் நாளில் 3 வேளை இதனை குடிக்கலாம்.
மோர்:
தயிர், சீரகம், பெருங்காயம், மற்றும் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து அதனை மோர் ஆக்கி குடித்தாலும் வயிற்று வலியில் இருந்து விடுபடலாம்..
பழங்கள்:
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து வலியில் இருந்து விடுபட உங்களுக்கு உதவும். அதே போல் அன்னாசி பழமும் உடலுக்கு நல்லது. மாதவிடாய் காலங்களில் சிலருக்கு மலச்சிக்கல் பிரச்னைகள் ஏற்பட்டு வயிற்று வலி ஏற்படும். அதனால் மலச்சிக்கலை போக்கும் பழங்களை சாப்பிடுவதன் மூலமும் வலியில் இருந்து விடுபடலாம்.
இவைமட்டுமல்லாமல் உளுந்தங்களி, வெந்தயக் களி உள்ளிட்ட களி வகைகளையும் உணவில் சேர்த்துக் கொண்டால் இடுப்பு எலும்புகள் வலுவாகும். இதனால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி குறையும். மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். துரித உணவுகள் மற்றும் காரசாரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. சத்தான உணவுகள் மற்றும் நல்ல ஓய்வு மூலம் உங்கள் பிரச்னைகளில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருங்கள்.