வெள்ளி, 31 ஜூலை, 2020

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!


Image

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

 

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன், பகுதியளவு ஆன்லைன், ஆப்லைன் என மூன்று முறைகளில் பாடங்களை எடுக்கலாம் என அறிவித்துள்ளது. 

 

அதன்படி, நாள் ஒன்றுக்கு 45 நிமிடங்கள் வீதம் தலா 6 வகுப்புகள் மட்டுமே ஆன்லைனில் நடத்தப்பட வேண்டும் எனவும், எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஒன்றரை மணி நேரமும், 9 முதல் 12ம் வகுப்பு வரை மூன்று மணி நேரம் வரை மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு வகுப்புக்கும் இடையே 10 முதல் 15 நிமிடங்கள் இடைவேளை விட வேண்டும் எனவும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வகுப்புகளை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. பெற்றோர்களின் அனுமதியுடனே தனிநபர் விவரங்களை பகிர வேண்டும் எனவும், இணையதள கையாளுதல் முறைகளையும், பாதுகாப்பு முறைகளையும் மாணவர்களுக்கு பெற்றோர் விளக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மேலும் படுக்கை அறைகளில் அமர்ந்து கொண்டு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கக் கூடாது எனவும், பெற்றோர் கண்காணிப்பில் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க வாய்ப்பு இல்லாத மாணவர்களுக்கு, பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.