செவ்வாய், 21 ஜூலை, 2020

மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் கண்டன முழக்கங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் கண்டன முழக்கங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டார். கறுப்புச் சட்டை அணிந்து கைகளில் பதாகைகள் ஏந்தி மின் கட்டண உயர்வுக்கு எதிராக அவர் முழக்கம் எழுப்பினார்.

இன்று கறுப்புக் கொடி தாங்கினோம்; கண்டன முழக்கம் எழுப்பினோம் – ஸ்டாலின்

மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் அவரவர் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் முன்பாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மனிதச்சங்கிலி வடிவில் ஒருவருக்கு ஒருவர் இடைவெளி விடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

மு.க.ஸ்டாலின் முழக்கம்

”வேண்டும், வேண்டும், மின் கட்டணத்தில் சலுகை வேண்டும்…” என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பிய ஸ்டாலின், கேரளா, மத்தியப் பிரதேசம், போன்ற மாநிலங்களில் மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் போது தமிழகத்தில் மட்டும் அது முடியாதது ஏன்? என கேள்வி எழுப்பினார். மின் கட்டணம் ரீடிங் எடுக்கப்பட்டதில் குழப்பமும், குளறுபடியும் நிகழ்ந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

“கொள்ளைடிக்காதே கொள்ளையடிக்காதே, கொரோனா காலத்திலும் கொள்ளையடிக்காதே! குழப்பாதே குழப்பாதே, ரீடிங் எடுப்பதில் குழப்பாதே” ஆகிய கோஷங்கள் எழுப்பப்பட்டன.

திமுக இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகத்தில் உதயநிதி ஸ்டாலினும், சி.ஐ.டி. காலனியில் உள்ள தனது இல்லத்தின் முன்பு கனிமொழி எம்.பி.யும் போராட்டம் நடத்தினர். மின் கட்டணத்தை பார்த்து தமிழகத்தில் அதிர்ச்சி அடையாத குடும்பமே கிடையாது என்றும் மக்களின் குரலாக திமுக ஒலிக்கிறது எனவும் கனிமொழி எம்.பி. கூறினார்.


வேலூர் மாவட்டம் காட்டியில் உள்ள வீட்டில் துரைமுருகன் மற்றும் மகன் கதிர் ஆனந்த் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூரில் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையில் தடையை மீறி மின்வாரிய அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் தமிழகம் முழுவதும் கிராமங்கள் வாரியாக திமுகவினர் மின் கட்டண உயர்வை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். திருச்சியில் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆகியோர் தலைமையில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மின் கட்டண உயர்வை கண்டித்து தனது வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனிடையே திருவாரூர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் தடையை மீறியும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டம் குறித்து ஸ்டாலின் அறிக்கை:

“கொரோனா நோய்த் தொற்று ஒரு பக்கம் மக்களை விரட்டிக் கொண்டு இருக்கிறது என்றால், இன்னொரு பக்கம் அ.தி.மு.க. அரசு மக்களை மிரட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தக் கொள்ளை நோய்க் காலத்தில் மக்களைக் காக்கத் தவறிய மாநில அரசு, மின் கட்டணம் என்ற பெயரால் அநியாயக் கொள்ளை நடத்திக் கொண்டு இருக்கிறது.

இது ஊரடங்கு காலம் என்பதால் பெரும்பாலானவர்களுக்கு வேலை இல்லை, ஊதியம் இல்லை; தொழிலும் இல்லை; வருவாயும் இல்லை. அதை மனதில் வைத்து மின்கட்டணத்தைத் தமிழக அரசு குறைத்திருக்க வேண்டும். ஆனால் முதலமைச்சர் திரு. பழனிசாமி அரசு மின் கட்டணத்தை அளவுக்கு மீறி அதிகப்படுத்தி, தன் பங்குக்கு மக்களைக் கொடுமைப்படுத்தி வருகிறது.

இதனைக் கேள்வி கேட்டால், மின் கட்டணத்தை அதிகப்படுத்தவில்லை என்று பச்சைப் பொய்யை அறிக்கையாக வெளியிடுகிறார் மின் துறை அமைச்சர் தங்கமணி. பொதுமக்கள், மின் கட்டணம் அநியாயமாக உயர்த்தப்பட்டு, அதனால் தாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுத்தி வருவதை அமைச்சர் பார்க்கவில்லையா? பார்த்து விட்டு மழுப்பிக் கொண்டு இருக்கிறாரா?
இத்தகைய மின் கட்டணக் கொள்ளையை எதிர்த்து தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று காலையில் கண்டன முழக்கம் எழுப்பிக் கண்டித்தோம். கறுப்புக் கொடி தாங்கி தமிழக அரசுக்கு எதிர்ப்பைக் காட்டினோம். திமுகவினர் மட்டுமல்ல ஏராளமான பொதுமக்களும் இதில் பங்கெடுத்தார்கள்.

இதன் பிறகாவது மின் கட்டணத்தை ஒழுங்கு படுத்துங்கள். குறையுங்கள்; சலுகை காட்டுங்கள்; மக்கள் மீது கருணை வையுங்கள் என்று அதிமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.