செவ்வாய், 21 ஜூலை, 2020

வால்வுகள் பொருந்திய N-95 வகை முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டாம்: மத்திய அரசு அறிவுரை

சுகாதார ஊழியர்கள் பயன்படுத்தும் N-95 முககவசங்களை தவிர்த்து பொதுமக்களால் உபயோகப்படுத்தப்பட்டு வரும் வால்வுகள் பொருந்திய N-95 வகை முககவசங்களை பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே நோய் மக்களுக்கு பரவாமல் தடுக்க முககவசங்கள் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதனால் முககவசங்களுக்கான தேவை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இதில் பல்வேறு வகையான முககவசங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி சுகாதார ஊழியர்கள் பிரத்யேகமாக பயன்படுத்தும் N-95 முககவசங்களை போலவே தயாரிக்கப்பட்ட வால்வுகள் பொருந்திய முககவசங்களை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் வால்வுகள் பொருந்திய N-95 முககவசங்கள் கொரோனா பாதிப்பை தடுக்காது என்பதால் அதனை பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சுகாதார ஊழியர்கள் பயன்படுத்தும் N-95 முககவசங்கள் தவிர்த்து பொதுமக்களால் அதிக அளவில் வால்வுகள் பொருந்திய N-95 முககவசங்கள் பயன்படுத்தப்படுகிறது. 

இந்த வால்வு N-95 முககவசங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்காது. மாறாக தீங்கு விளைவுக்கும். எனவே இது போன்ற பொருத்தமற்ற முககவசங்கள் அணிவதை தடுக்க மக்களுக்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என அந்த கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.