சனி, 25 ஜூலை, 2020

நில அளவீட்டு கட்டணத்தை 40 மடங்கு உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு!

Image

தமிழகத்தில் நில அளவீட்டு கட்டணத்தை 40 மடங்கு உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 


நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் தொடர்பான அரசாணையை தமிழக அரசின் வருவாய்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, நன்செய் நிலத்தின் எல்லை நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் 50 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. புல எல்லைகளை சுட்டிக்காட்டும் கட்டணம் 20 ரூபாயிலிருந்து 200 ரூபாயாகவும், கோணமானி மூலம் பக்க எல்லைகளை சுட்டிக்காட்ட 30 ரூபாயிலிருந்து 300 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


மேல் முறையீட்டின் பேரில் மறு அளவீட்டு புன்செய் நிலத்திற்கு 60 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும், மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீட்டு நன்செய் நிலத்திற்கு 60 ரூபாயில் இருந்து 4000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் வழங்குவதற்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.  நில அளவை தொடர்பாக அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரையை ஏற்று, கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.