வியாழன், 23 ஜூலை, 2020

மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு இந்த உணவுப் பொருட்களை கொடுக்க மறக்காதீர்கள்!

மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு இந்த உணவுப் பொருட்களை கொடுக்க மறக்காதீர்கள்!

தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதால் நமது உடல்நலத்தில் அக்கறை கொள்ள வேண்டியது அவசியம். இந்த சூழ்நிலையில் பலருக்கும் சளி, இருமல் தொந்தரவுகள் ஏற்படும். அதில் இருந்த நம்மை பாதுகாத்துக் கொள்ள அதற்கேற்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு மழைக்காலத்தில் பல்வேறு தொந்தரவுகள் ஏற்படும். 

சில குழந்தைகள் கீரைகள், பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிட மாட்டார்கள். ஆனால் அதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. மழைக்காலத்தில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு சில உணவுப் பொருட்களை அவர்கள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதுபோன்ற சில உணவுப் பொருட்களை கீழே காண்போம்.

பூண்டு (Garlic):

1


பூண்டு குழந்தைகளின் உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடெண்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மேலும் குழந்தைகளின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. 

அருமையான சுவை மற்றும் மசாலாவுக்காக பூண்டை பல்வேறு உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். அதிலும் பூண்டு சட்னி மிகவும் எளிதாக தயாரிக்கலாம். நிறைய குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடிக்கும். ஆனால் குழந்தைகளின் வயது மற்றும் உடல்நலத்திற்கு ஏற்ப அதில் காரம் சேர்த்துக் கொள்வது நல்லது.

மஞ்சள் (Turmeric):

2


மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. குழந்தைகள் எடுத்துக் கொள்ளும் உணவில் கட்டாயமாக சேர்க்க வேண்டிய ஒரு பொருள் மஞ்சள். தூங்குவதற்கு முன் பாலில் மஞ்சள் கலந்து குழந்தைகளுக்கு கொடுங்கள். இதனால் அவர்கள் நிம்மதியாக தூங்குவது மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். தொற்றுநோயை எதிர்த்து போராடும் பண்பும் மஞ்சளுக்கு உண்டு.

பாகற்காய் (Bitter gourd):

3


பெரும்பாலான குழந்தைகளுக்கு கசப்பான உணவுகள் என்றாலே பிடிக்காது. ஆனால் பாக்டீரியா, பூஞ்சை, வைரஸை எதிர்த்து போராடும் திறன் உள்ள கசப்பு உணவுகள், உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை மறந்துவிடாதீர்கள். 

நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள சூழலில் இதுமாதிரியான உணவுகளை தவிர்க்க கூடாது. சுவாச பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கவும் பாகற்காய் உதவும்.

பழங்கள் (Fruits):

4


அந்தந்த பருவகாலத்திற்கு ஏற்ற வகையிலான பழங்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். லிச்சி, செர்ரி, பீச் மற்றும் பிளம்ஸ் போன்ற பழங்கள் மழைக்காலத்தில் சாப்பிட தகுந்தவை. 
இதுமட்டுமல்லாமல் மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம், பேரீச்சம்பழம், பப்பாளி ஆகியவையும் குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய பழங்கள். இதில் அதிக அளவில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மேலும் நோயை எதிர்த்து போராடுவதற்கான சத்துக்களை உங்கள் குழந்தைகளின் உடலுக்கு இந்த பழங்கள் கொடுக்கும்.

பருப்பு (Dal):

 

5
ஏராளமான பருப்பு வகைகள் கிடைக்கின்றன. இவை உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதில் அதிக அளவில் புரதம் காணப்படுகிறது. தொற்றுநோயை எதிர்த்து போராட உதவும் உணவு வகைகளில் பருப்பும் ஒன்று. குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் சமயத்தில் பருப்பு சூப் வைத்து கொடுத்தால் அவர்கள் விரைவில் குணமடைவார்கள்.

சூப் (Soup):

6


மழை நேரத்தில் சூடான சூப் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். குளிர்ச்சியான நேரத்தில் குழந்தைகளின் உடலுக்கு தேவையான ஒரு மிதமான வெப்பத்தை இந்த சூப்கள் கொடுக்கும். உடல்நிலை சரியில்லாத குழந்தைகள் சாப்பாடு சாப்பிடுவதற்கு அடம் பிடிப்பார்கள். அப்போது அவர்களுக்கு இதுபோல் சூப் வைத்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள். 

குறிப்பாக காய்கறி சூப் குழந்தைகளுக்கு பலவித சத்துக்களை கொடுக்கும். உலர் பழங்கள், பாதாம், முந்திரி, பாதாம், எள் உள்ளிட்டவை குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது. அதே போல் உலர் திராட்சையும் உடலுக்கு நல்லது. குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். இதன் மூலம் குழந்தைகளின் வயிறும் நிறையும். அதனால் இவற்றை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியது மிக மிக அவசியம்.

பீட்ரூட்:

7


பீட்ரூட்டில் அதிக அளவிலான வைட்டமின்கள், தாதுக்கள், பொட்டாசியம் காணப்படுகின்றன. இது உடலுக்கு ஆரோக்கியமானது. உடல்நலம் பாதிக்கப்பட்டு சோர்வாக இருக்கும் குழந்தைகளுக்கு, பீட்ரூட் கொடுத்தால் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.