ஞாயிறு, 26 ஜூலை, 2020

வடகொரியாவுக்குள் நுழைந்த கொரோனா?: ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் அதிபர் கிம்!

வடகொரியாவில் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் பல்வேறு நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. பொருளதாரத்தில் பின்தங்கிய நாடுகள் முதல் வளர்ந்த நாடுகள் வரை இந்த வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. 

நிலைமை இப்படியிருக்க வட கொரியாவில் ஒரு நபருக்கு கூட கொரோனா தொற்று உறுதியாகவில்லை என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் கூறி வந்தார். 

இந்நிலையில் வட கொரியாவில் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த நபர் தென் கொரியாவில் இருந்து சட்டவிரோதமாக எல்லையை கடந்து வட கொரியாவிற்கு வந்தவர் என கூறுகின்றனர். அவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து, அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரிகளுடன் அவரச ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து, எல்லை நகரமான கேசாங்கில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

3

இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக உறுதியாகும் பட்சத்தில், வட கொரியாவில் அதிகாரிகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவாக இருக்கும். அந்த குறிப்பிட்ட நபருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்த தகவல் முழுமையாக வெளியாகவில்லை. ஆனால் மற்ற மருத்துவ பரிசோதனைகள் மூலம் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க வட கொரியா அரசு கடுமையான கட்டுப்பாடுகளை தொடக்கத்தில் விதித்திருந்தது. கொரோனா அறிகுறிகளுடன் காணப்படும் நபர் கடந்து வந்த எல்லையில் உள்ள ராணுவப் பிரிவுகளில் விசாரணை மேற்கொள்ளவும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். உரிய நடவடிக்கை எடுப்பதற்கும், தண்டனை வழங்குவதற்கும் அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.