வியாழன், 30 ஜூலை, 2020

15 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கை தூசி தட்டும் அமெரிக்கா: யார் இந்த ரஷீத் சவுத்ரி?

Amitava Chakraborty

கடந்த மாதம் அமெரிக்கா அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார்,  1975 ஆம் ஆண்டில் வங்க தேசத்தின் தந்தை என்று அழைகப்பட்ட அந்நாட்டின் முதல் அதிபரான க்ஷேக் முஜிபுர் ரஹ்மான் கொலை தொடர்பாக 15 ஆண்டுகளாக மூடப்பட்ட வழக்கின் வழக்கு தொடர்பான ஆவணங்களை அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

எம்.ஏ ரஷீத் சவுத்ரி  1996 முதல் அமெரிக்காவில் வசித்து  வருகிறார். முஜிபுர் ரஹ்மான் மகள் ஷேக் ஹசீனா பங்களாதேஷின் பிரதமரான ஆண்டு. ராணுவ சதிச்செயலில்  ஈடுபட்டவர்களை விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கும் பொது மன்னிப்பு சட்டத்தை டாக்கா பாராளுமன்றத்தில் ஷேக் ஹசீனா ரத்து செய்தார்.

யார் இந்த ரஷீத் சவுத்ரி?  வங்க தேசத்தின் இராணுவ அதிகாரியாகவும் , இராஜதந்திரியாகவும் இருந்தவர்  ரஷீத் சவுத்ரி. ஆகஸ்ட் 15, 1975 இல் முஜிபுர் ரஹ்மானின் படுகொலை தொடர்பான இராணுவ சதித்திட்டத்தில் பங்களித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த காலகட்டங்களில், வங்கதேச இராணுவத்தில் மேஜராக சவுத்ரி பதவி வகித்து வந்தார்.

சதித் திட்டத்திற்கு பின்?

ரஹ்மானின் மரணத்தைத் தொடர்ந்து, ஆட்சி கவிழ்ப்பு, படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் கைது செய்வதில் இருந்து விலக்கு அளிக்கும் பொது மன்னிப்பு  பிரகடனம்  நிறைவேற்றியது. 1979 ஆம் ஆண்டில், லெப்டினன்ட் ஜெனரல் சியாவுர் ரகுமான் ஜனாதிபதியாக இருந்தபோது, ​​இந்த பிரகடனம்  நாடாளுமன்றத்தின் சட்டமாக இயற்றப்பட்டது.

முஜிப் படுகொலை செய்யப்பட்ட சில நாட்களில் , வங்க தேசத்தின் இராணுவத் தளபதியாக  பதவியேற்ற சியாவுர்  ரஹ்மான், 1977ல்    ஜனாதிபதியாக உருவாகினார். 1978 இல் வங்கதேச தேசியவாதக் கட்சியை (பிஎன்பி) நிறுவியதோடு, பலகட்சி அரசியல் நெறிமுறையையும், திறந்த சந்தைப் பொருளாதாரத்தையும் அறிமுகப்படுத்தினார்.  மே 1981 இல்சியாவுர்  ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டதற்கு பிறகு, அவரது மனைவி கலீதா ஜியா வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.

1991- 1996, 2001 – 2006   என பத்தாண்டுகள் வங்கதேசத்தின்  பிரதமராக பணியாற்றினார். கலீதா ஜியாவின் முதல் பதவிக்காலத்திற்குப் பிறகு, ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சியைக் கைப்பற்றியது. விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கும் பொது மன்னிப்பு சட்டத்தை ரத்து செய்ததோடு, முஜீப் படுகொலை வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட 20 பேரை ஹசினா அரசாங்கம் விசாரணைக்கு உட்படுத்தியது.

1996 இல், ரஷீத் சவுத்ரி பிரேசிலில் உள்ள வங்கதேச தூதரக அலுவலகத்தில் தூதரக அதிகாரியாக பணியாற்றினார். தாய்  நாட்டுக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்ற அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து,  ​சவுத்ரி தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்.

அமெரிக்காவில் என்ன நடந்தது? அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றபின், சவுத்ரி அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்தார். சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு (2004-ல்), அமெரிக்க குடிவரவு நீதிபதி ஃபான் குவாங்,  ரஷீத் சவுத்ரிக்கு புகலிடம் அளித்தார்.

முஜிப்பின் கொலை சதித்திட்டத்தில் சவுத்ரி முக்கிய பங்கு வகிப்பதாக பங்களாதேஷ் அரசாங்கம் குற்றம் சாட்டிய அதே வேளையில், நீதிபதி பான் குவாங் டியூ தனது தீர்ப்பில்,  “ஒப்பீட்டளவில்  அவரின் பங்கு மிகச் சிறியது”என்று தெரிவித்தார்.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. அரசியல் சதித்திட்டத்தில் ரஷீத் சவுத்ரியின் பங்களிப்பு இருப்பதால் அவருக்கு புகலிடம் பெறத்  தகுதியற்றவர் என்று தெரிவித்தது. இதன் மூலம், வழக்கு அமெரிக்க நீதித்துறையின் குடிவரவு மேல்முறையீட்டு வாரியத்திற்கு (BIA) சென்றது. 2006 ஆம் ஆண்டில், சவுத்ரிக்கான அரசியல் புகலிடத்தை மேல்முறையீட்டு வாரியம்  உறுதி செய்தது.

மீண்டும், வழக்கு ஏன்  முக்கியத்துவம் பெறுகிறது?

சீனாவின் ஆதிக்கம் வங்காளதேசத்தில் நுழையாமல் தடுக்கவும், ஹசினா அரசாங்கத்துடனான தனது நட்புறவை அதிகரித்துக் கொள்ளவும் ரஷீத் சவுத்ரியை நாடு கடத்த டிரம்ப் நிர்வாகம்  முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. ரஷீத் சவுத்ரியை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்களில் ஒருவரான மார்க் வான் டெர் ஹவுட், கூறுகையில்,” வங்கதேசத்துடேன் சாதகமான  சூழலை உருவாக்கும் நோக்கில்  டிரம்ப் நிர்வாகம் இதை செய்கிறது” என்று தெரிவித்தார்.

நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பொருட்டு,  ஹசினா  தலைமையிலான வங்கதேச  அரசு சீனாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. வங்கதேச  ஊடகங்களின்படி, நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் பெய்ஜிங்குடன் இனைந்து, நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள சில்ஹெட் விமான நிலையத்தின் டெர்மினல்  கட்டடத்தை விரிவாக்க செய்யவிருக்கிறது.  அசாம், மேகாலயா,திரிபுரா எல்லைகளுக்கு மிக அருகில் சில்ஹெட் மாவட்டம் உள்ளது.

ரஷீத் சவுத்ரியின் கைது நடவடிக்கையில்  வங்கதேசத்தின் முயற்சிகள் என்ன ?  

உச்சநீதிமன்றத்தால் மரண தண்டனை வழங்கப்பட்ட ரஷீத் சவுத்ரியை தங்களிடம் ஒப்படைக்குமாறு  பல ஆண்டுகளாக அமெரிக்காவை வற்புறுத்த வந்தது.

அக்டோபர் 10, 2011 அன்று, தனது அமெரிக்க  பயணத்தின் போது, வங்கதேச வெளியுறவு அமைச்சர் திப்பு மோனி, அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டனிடம்  சவுத்ரியை நாடு கடத்தும் நடவடிக்கை குறித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து, மார்ச் 29, 2012 அன்று, அமெரிக்காவுக்கான  வங்கதேச தூதராக இருந்த அக்ரமுல் காதர், சவுத்ரியை திருப்பி அனுப்புமாறு உள்நாட்டுப் பாதுகாப்பு கமிட்டி தலைவரான  பீட்டர் கிங் என்பவரிடம் முறையாக கோரிக்கை விடுத்தார்.

வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ உள்ளிட்ட அதிகாரிகளிடம் இந்த பிரச்சனை குறித்து பேசி வருகிறார் .