திங்கள், 27 ஜூலை, 2020

இடஒதுக்கீடு தொடர்பான அம்சங்களை பாதுகாக்க வலியுறுத்தி தலைவர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

Image

இடஒதுக்கீடு தொடர்பான அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை பாதுகாத்திட குரல் கொடுக்க வேண்டும் என்று தேசிய தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா மற்றும் தேசிய கட்சிகளின் தலைவர்களான லாலு பிரசாத் யாதவ், உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி, ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ், தேவகவுடா, மாயாவதி உள்ளிட்டோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், முதுகலை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக நடத்தும் சமூக நீதி போருக்கு ஆதரவு தர வேண்டும் என்றும், பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன சமூகங்களுக்கான சமத்துவத்தை உறுதி செய்ய, அவர்கள் சமவாய்ப்பு பெற்றிட வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இட ஒதுக்கீடு தொடர்பான அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை பாதுகாத்திட குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

இதனிடையே சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுப்புறச்சூழல் முன் அனுமதி பெற வேண்டிய எண்ணற்ற திட்டங்களை மறுவகைப்படுத்தி அவற்றை எல்லாம் அனுமதி பெறத் தேவையில்லாத பட்டியலில் சேர்த்திருப்பது, மக்கள் விரோத அறிவிக்கையாகவே உள்ளதாக விமர்சித்துள்ளார்.

எனவே, இந்த அறிவிக்கையை திரும்பப்பெற்று, நாட்டில் உள்ள இயற்கை வளங்களையும், மக்களின் சுகாதாரத்தையும் பாதுகாத்திட மத்திய அரசு முன்வர வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.