வியாழன், 23 ஜூலை, 2020

ரூ.700ல் வெண்டிலேட்டர்... ஆப்கானிஸ்தான் மாணவிகள் அசத்தல் கண்டுபிடிப்பு!

Image

கிழக்கு ஆப்கானிஸ்தானில் 18 வயது பள்ளி மாணவி சோமயா ஃபாருகி மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் இணைந்து குறைந்த விலை வெண்டிலேட்டர்களை உருவாக்கி அசத்தியுள்ளனர். 

கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் போதிய மருத்துவ வசதிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வெண்டிலேட்டர்கள் அவசியமாகின்றன. இதனை கருத்தில் கொண்டு ஆப்கானிஸ்தான் அரசுக்கு உதவு செய்யும் வகையில் மாணவிகள் சிலர் குறைந்த விலையில் வெண்டிலேட்டர்களை வடிவமைத்துள்ளனர். இதனை வடிவமைக்க ரூ.700 மட்டுமே செலவாகியுள்ளது.

Image

பெண்கள் மட்டுமே உள்ள இந்த ஆப்கானிஸ்தான் ரோபோடிக்ஸ் குழு வெண்டிலேட்டரை தயாரிக்க 4 மாதங்கள் எடுத்துக்கொண்டுள்ளது.  ஹார்வார்டு பல்கலைக்கழக வல்லுநர்களின் வழிகாட்டுதல்படி, இதனை வடிவமைத்துள்ளனர். இதனை கையாள்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும் என கூறும் இவர்கள் பேட்டரி உதவியுடன் சுமார் 10 மணி நேரம் முழுமையாக இதனை இயக்க முடியும் என குழுவினர் கூறியுள்ளனர். இதுதொடர்பாக மாணவி சோமயா ஃபாரூகி கூறுகையில், ‘நாங்கள் மருத்துவத்துறையில் முதல் அடியை எடுத்து வைத்துள்ளோம். எங்களால் மக்களுக்கு சேவை செய்ய முடிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. பல மாத கடின உழைப்புக்கு பிறகு வெற்றிபெற்றுள்ளோம். அதனால் குழுவினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம்’ என்று கூறினார்.

Image

இந்த வெண்டிலேட்டர்கள் இன்னும் இறுதி பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. இருப்பினும் குறைவான வெண்டிலேட்டர்கள் உள்ள ஆப்கானிஸ்தானில், மாணவிகளின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு சுகாதார அமைச்சக செய்தி தொடர்பாளர் அக்மல் சாம்சோர், பரிசோதனை முடிந்து ஒப்புதல் வழங்கப்பட்டதும் மருத்துவமனைகளுக்கு வெண்டிலேட்டர்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும், இந்த கண்டுபிடிப்பு உலக சுகாதார நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.