செவ்வாய், 21 ஜூலை, 2020

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம்!

Image

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


மதுரை மாவட்டத்தை சேர்ந்த அமுதா, கடந்த 1994ம் ஆண்டு கடலூர் சார் ஆட்சியராக தனது ஐஏஎஸ் பணியை தொடங்கினார். இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியராகவும், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியராகவும் அவர் பணியாற்றினார். திமுக, அதிமுக, ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சிகளிலும் உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உள்பட தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளையும் அமுதா வகித்துள்ளார். 2015-ல் சென்னை பெரு வெள்ளத்தின்போது, வெள்ள பாதிப்புகளை சரி செய்யும் சிறப்பு அதிகாரியாக அமுதா நியமிக்கப்பட்டார். அப்போது, ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி, சிறப்பாக பணியாற்றிய அமுதா ஐஏஎஸ், அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டார்.


நேர்மையான அதிகாரியாக மக்களின் அன்பைப் பெற்ற அமுதாவுக்கு, நியூஸ் 7 தமிழ் தங்கத் தாரகை விருது வழங்கி கெளரவித்துள்ளது. தற்போது, உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வரும் அமுதாவுக்கு, பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர், மட்டுமல்லாமல் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பலதுறைகளில் இணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.