தலைநகர் டெல்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பலர் வீடுகளை இழந்துள்ளனர். இந்தியா கேட், ஜன்பத், விஜய் சவுக், ஆர்.கே. புரம், மண்டி ஹவுஸ் என டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. டெல்லியின் அண்ணா நகரில் பெய்த கன மழை காரணமாக பல வீடுகள் இடியும் நிலையில் உள்ளன. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், அரசின் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பீகாரில் பெய்து வரும் கனமழையில் கர்ப்பிணி பெண் ஒருவர் சிக்கிக் கொண்டதை அடுத்து, அவர் அப்பகுதி மக்களால் பத்திரமாக மீட்கப்பட்டார். பீகாரின் தர்பங்கா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வசித்து வந்த பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டது. கர்ப்பிணியான அவரை மீட்பதற்காக டயர்களைக் கொண்டு படகு தயாரித்த அப்பகுதி மக்கள், கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தாயாரை படகில் அமர வைத்து தள்ளிக் கொண்டு சென்றனர். பின்னர் அந்த பெண், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். இதேபோல், பிகாரின் சிதாமர்ஹி பகுதியில் பெய்த கன மழை காரணமாக, பாக்மதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாமில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கன மழையால், அஸ்ஸாமின் புராதியா ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனிடையே, அஸ்ஸாமின் காசிரங்கா தேசிய விலங்கியல் பூங்காவில் கனமழையில் சிக்கி உயிரிழந்த விலங்குகளின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.