சனி, 25 ஜூலை, 2020

கறுப்பர் கூட்டம்: சொந்தில்வாசனை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிர்வாகி செந்தில் வாசனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சைபர் கிரைம் காவல்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Image

கந்தசஷ்டி கவசத்தை அவமதிப்பு செய்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வீடியோ வெளியிட்டது. இது தொடர்பாக அந்த சேனலின் நிர்வாகி செந்தில் வாசன், சுரேந்திரன், ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம் மற்றும் வீடியோ எடிட்டர் குகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிர்வாகி செந்தில் வாசன், சுரேந்திரன் ஆகிய இருவரை சைபர் கிரைம் காவல்துறையினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதே வேளையில், தன்னை காவல்துறையின் கட்டுப்பாட்டில் விசாரணைக்கு எடுக்க அனுமதிக்க கூடாது என சுரேந்திரன் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

Image

இந்த மனுக்கள் நீதிபதி ரோஸ்லின் துரை முன்பாக விசாரணைக்கு வந்த போது, இவர்களுக்கு பின்னணியில் யாரும் உள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளதால் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த சுரேந்திரனை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தார். 

அதே வேலையில் அந்த யூடியூப் சேனலின் நிர்வாகி செந்தில் வாசனை மட்டும் 4 நாட்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் காவல்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.